
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்ட 9 குற்றவாளிக்கும் சாகும் வரை சிறைத் தண்டனை அளித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்புக்கு பெண்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் வரவேற்பு அளித்த நிலையில் முதல்வர் ஸ்டாலின், “பொல்லாத அ.தி.மு.க. நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது. அ.தி.மு.க. குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்” என்று அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
அதேசமயம் பதிலுக்கு திமுகவை கடுமையாக விமர்சித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அந்த குற்றவாளிக் கூடாரத்தைக் கைது செய்தது எனது அரசு. உங்களைப் போல் திமுக அனுதாபி என்பதால் காப்பாற்றத் துடிக்கவில்லை. நடுநிலையோடு CBI விசாரணைக்கு உத்தரவிட்டேன். அதற்கான நீதியே இன்று கிடைத்துள்ளது என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, “பொள்ளாச்சி விவகாரத்தில் குற்றவாளிகளை பாதுகாக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் அவர்கள்(அதிமுக) எடுத்தார்கள். பாதிக்கப்பட்ட பெண்களின் பக்கம் அதிமுக ஆட்சி நிற்கவில்லை. அவர்களுடைய கட்சியில் சிலர் பொறுப்பில் இருந்த காரணத்தால், அவர்களுக்கு சிலர் நெருக்கமாக இருந்த காரணத்தால் அவர்கள் குற்றவாளிகளை பாதுகாப்பதில் குறியாக இருந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு கூட பதிவு செய்ய அவர்கள் தயாராக இல்லை. அப்படிப்பட்ட சூழலில்தான் யாருக்கும் அதிமுக ஆட்சி மீதோ, எடப்பாடி பழனிசாமி மீதோ நம்பிக்கை இல்லை என்ற காரணத்தினால்தான் அவர்கள் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அதனால் அவர்களாக பொள்ளாச்சி வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்ற நிலைக்கு வரவில்லை. ஆட்சியில் இருக்கும் போது ஒழுங்காக வழக்குப் பதிவு செய்து சரியான முறையில் விசாரணை நடத்தியிருந்தால் சிபிஐக்கு மாற்றிருக்க வேண்டிய அவசியமே வந்திருக்காது. சிபிஐக்கு மாற்றியதை பெருமையாக நினைத்தால், அது பெருமை அல்ல; வெட்கப்பட வேண்டிய விஷயம்” என்று தெரிவித்துள்ளார்.