
கோவை மாவட்டம், உக்கடம் பகுதியில் 12ம் வகுப்பு படித்துவந்த மாணவி, கடந்த வியாழக்கிழமை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் மாணவியின் பள்ளி இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். பாலியல் துன்புறுத்தல் செய்ததன் காரணமாக மனமுடைந்த நிலையில் காணப்பட்ட மாணவி, தற்கொலை செய்து கொண்டதாக மாணவியின் பெற்றோர் புகார் தெரிவித்திருந்தனர்.
இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட உக்கடம் அனைத்து மகளிர் காவல் துறையினர், இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது தற்கொலைக்கு தூண்டுதல், போக்சோ சட்டத்தின் 2 பிரிவுகள் என மொத்தம் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் போலீஸ் விசாரணை வளையத்தில் இருந்த ஆசிரியர் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போலீசார் உடல் பரிசோதனை செய்த பின்னர் நீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத்தி உடுமலைப்பேட்டை கிளைச் சிறையில் அடைத்தனர்.

பாலியல் தொல்லை காரணமாகப் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் இதுகுறித்து தூத்துக்குடி எம்.பி.கனிமொழி, ''தொடர் பாலியல் தொல்லை குறித்து மாணவி பலமுறை சொல்லியும் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆசிரியரின் பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பதறவைக்கிறது. இந்த விவகாரத்தில் அந்த தனியார் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என அவரது டிவிட்டர்பக்கத்தில்தெரிவித்துள்ளார்.
Follow Us