Skip to main content

’48 குடும்ப தலைவர்களையும் மீட்டுத்தாருங்கள்..’-கனிமொழியிடம் கிராம மக்கள் கண்ணீர் மனு 

Published on 03/12/2018 | Edited on 03/12/2018
k

 

ராஜ்யசபா எம்.பியாக கனிமொழி தூத்துக்குடி விமானநிலையம் வழியாக நெல்லை மாவட்டம் வந்தார்.  மாவட்டத்தில் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.   நேற்று இரவு கடையநல்லூரில் பொதுக்கூட்டம் முடிந்து புறப்பட்ட கனிமொழியை  40க்கும் மேற்பட்ட குடும்பத்தார்கள் சந்தித்தனர்.  அவர்கள் அனைவரும் மாவட்டத்தின் தலைவன் கோட்டை கிராமத்தை சேர்ந்தவர்கள்.   கனிமொழியிடம் மனு கொடுப்பதற்காகவே இரவில் 3 வேன்களில் சென்றனர்.   

 

k

 

அவர்கள் கொடுத்த கோரிக்கையில் அடங்கியிருப்பது என்னவென்றால்,   ‘’கடந்த 45 நாட்களுக்கு முன்னர் இந்த கிராமத்தை சேர்ந்த 48 பேர் மலேசியா நாட்டிற்கு மின்சார டவர் அமைக்கும் வேலைக்காக சென்றனர்.  இவர்களை இங்கிருந்த ஒரு தனியார் ஏஜென்சி அனுப்பியிருந்தது.  மலேசியா சென்றபிறகு குறிப்பிட்ட பணியை தராமல் வேறு பல கடுமையான வேலைகளை கொடுத்துள்ளனர்.  அந்த வேலையில் பழக்கப்படாதவர்கள் சிரமப்பட்டுள்ளனர்.  அதையடுத்து அங்குள்ள நிறுவனத்திடம்,  எங்களுக்குஇந்த வேலை பிடிக்கவில்லை.  தாய்நாடு திரும்புகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.  இதை ஏற்றுக்கொள்ளாத மலேசிய நிறுவனம்,  உங்கள் அனைவருக்கும் தலா ஒரு லட்சம் வீதம் ஏஜென்சியிடம் செலுத்தியுள்ளோம்.   அந்தப்பணத்தை வேலை செய்து கழித்துவிட்டு செல்லுங்கள் என்று திட்டவட்டமாக கூறியுள்ளதாம்.  இதனால் அந்த பணத்தை கழிப்பதற்காக 48 பேரும் கடுமையான பணியை செய்து வருகின்றனர்.  சம்பளத்தொகையில் முக்கால் வாசியை பிடித்துக்கொண்டு அவர்களின் சாப்பாட்டிற்கான பணத்தை மட்டுமே அந்த நிறுவன கொடுத்திருக்கிறது.  இது போன்று 4 மாதங்களுக்கு மேலாக சிரமப்பட்டு வரும் அவர்களின் தகவல் குடும்பத்தாருக்கு தெரியவில்லையாம்.   அதோடு,  அவர்களிடமிருந்து கடந்த 45 நாட்களாக எந்தவித தகவலும் வரவில்லையாம்.   இதனால் அவர்களின் கதி என்ன ஆனது என்று தெரியாமல் அச்சத்தில் இருக்கிறோம்.   இவர்கள் அனைவரும் 48 குடும்பத்தின் தலைவர்கள் ஆவர்.  இவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கண்ணீருடன் கோரிக்கை வைத்தனர்.

 

k

 

மனுவை பெற்றுக்கொண்ட கனிமொழி,  48 பேரையும் மீட்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுப்பதாக உறுதி அளித்தார்.


 

சார்ந்த செய்திகள்