Skip to main content

அரசு மருத்துவமனையின் அவலம்; நோயாளிக்கு மாப் குச்சியில் குளுக்கோஸ் பாட்டில்!

Published on 12/01/2024 | Edited on 12/01/2024
Kanchipuram Govt Hospital Treat patient with a glucose bottle on a mop stick

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் நாள்தோறும் சுமார் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள கிராமங்கள் மட்டுமின்றி அருகாமையில் உள்ள திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களும் இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருகின்றனர். 

இந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு, பிரசவ பிரிவு, நுண்கதிர் பிரிவு, பச்சிளம் குழந்தைகள் பிரிவு, இயன்முறை சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, காது, மூக்கு, தொண்டை சிகிச்சை பிரிவு உள்பட பல்வேறு பிரிவுகள் இயங்கி வருகின்றன. காய்ச்சலுக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் வார்டு எனத் தனித் தனி வார்டுகள் உள்ளன. காய்ச்சலுக்கான ஆண்கள் வார்டில் 10 படுக்கைகளும், பெண்கள் வார்டில் 12 படுக்கைகளும் மட்டுமே உள்ளன. இதனால் வைரல் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் என வருபவர்களுக்கு, டெங்குக்கான வார்டோ, கொரோனா தொற்றுக்கான தனிப்பிரிவோ இல்லாததால், அந்த நோயாளிகளை பொது வார்டில் வைத்து சிசிச்சை அளிக்கும் நிலை உள்ளது. இதனால் பொது வார்டில் இருப்பவர்களுக்கு காய்ச்சல் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகின்றது.

மேலும் இந்த காய்ச்சலுக்கான வார்டுகள் முறையாகப் பராமரிக்கப்படாமல் உள்ளது. இந்த காய்ச்சலுக்கான வார்டில் உள்ள படுக்கைக்கு அருகே "குளுக்கோஸ் ஏற்றுவதற்குரிய தனி ஸ்டேண்ட் பொருத்தாமல், தரையை பெருக்க உபயோகப்படுத்தும் துடைப்பத்தின் (தரையைத் துடைக்கப் பயன்படுத்தும் மாப்) அடிக்குச்சியை கட்டிலுடன் சேர்த்து கம்பி வைத்துக் கட்டி ஸ்டாண்டாக பயன்படுத்தி குளுக்கோஸ் ஏற்றப்படும் அவல நிலை உள்ளது. மேலும் சில இடங்களில் சுவிட்சுகள் பெயர்ந்து தொங்கிய நிலையில் உள்ளதால் நோயாளிகள் மீது மின்சாரம் பாயும் அபாயமும் உள்ளது.

சமீப நாட்களாக மருத்துவனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் பலர் கடுமையான காய்ச்சலுடன் வருகின்றனர். இவர்களில் பலரை உள் நோயாளிகளாக தங்க வைத்து சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் காய்ச்சல் வார்டில் படுக்கை இல்லாமல் பொது வார்டில் அனுமதிக்கப்படுவதால் பொது வார்டுக்கு வரும் இதய நோயாளிகள், சிறுநீரகப் பிரச்சினையுடன் வரும் நோயாளிகள் பெரும் அவதிக்கு உள்ளாவதாக இங்கு வரும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காய்ச்சல் முகாமில் போதிய உபகரணங்கள் இன்றி அனுமதிக்கப்படும் நபர்களுக்கு குளுக்கோஸ் பாட்டில் தொங்க விடுவதற்கு உபகரணங்கள் இன்றி தரை துடைப்பான் குச்சி கொண்டு குளுக்கோஸ் பாட்டில் ஏற்றப்பட்டு வருவது  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது எனச் சமூக ஆர்வலர்கள் வேதனைப்படுகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

பெண் வயிற்றிலிருந்து 5 கிலோ சினைப்பைக் கட்டி அகற்றம்; அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சாதனை!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Removal of 5 kg sphincter tumor from female stomach; Achievement of Government Medical College Doctors

பெண்ணின் வயிற்றில் இருந்த 5 கிலோ சினைப்பைக் கட்டியை அகற்றி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, மயிலாடுதுறை மாவட்டம் அளக்குடி கிராம பகுதியைச் சேர்ந்த வீரமணி மனைவி சசிகலா(38) வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்டார். அப்போது மருத்துவர்கள் பரிசோதனை செய்து போது அவரது கருப்பையில் 22 செ.மீ நீள அகலத்தில் 5.1 கிலோ சினைப்பைக் கட்டி இருப்பது தெரிய வந்தது.

பின்னர் இது குறித்து அறுவை சிகிச்சைக்கான அனைத்து விதமான சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்தப் பெண்ணிற்கு மருத்துவக் கல்லூரி மகப்பேறு மருத்துவர் வானதி தலைமையிலான மருத்துவ குழுவினர் திங்கள்கிழமை முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் பணம் செலவு இல்லாமல் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அந்தப் பெண்ணுக்கு ஏற்கெனவே 2 முறை வயிற்றில் மகப்பேறு அறுவை சிகிச்சை செய்துள்ளதால் மிகவும் சிக்கலான முறையில் 1 மணி நேரத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு கருப்பையில் இருந்த 5.1 கிலோ சினைப்பைக் கட்டியை  அகற்றி உள்ளார்கள். இதைத் தனியார் மருத்துவமனையில் செய்து இருந்தால் பல லட்சம் ரூபாய் செலவாகி இருக்கும். ஆனால் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் பெண்ணிற்கு எந்த செலவும் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்து அகற்றியுள்ளனர். இதற்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் திருப்பதி, கண்காணிப்பாளர் ஜூனியர் சுந்தரேசன் உள்ளிட்ட சக மருத்துவர்கள், மருத்துவ குழுவினருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அறுவை சிகிச்சை செய்து கொண்ட சசிகலா மற்றும் அவரது கணவர் கூலித்தொழிலாளி, இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் திடீர் மரணம்; கணவர் பரபரப்பு புகார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Family planning woman passed away suddenly

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே உள்ள கோடேபாளையத்தைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (30). இவரது மனைவி துர்கா (27). கடந்த 2018ல் இருவருக்கும் திருமணமானது. இவர்களுக்கு நான்கரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், 2-வது பிரசவத்துக்காக கடந்த 20ம் தேதி துர்காவை புளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அன்றைய தினம் மதியம் சுக பிரசவத்தில் குழந்தை பிறந்தது. அவரது குடும்பத்தினர் அருகில் இருந்து கவனித்துக் கொண்டனர். தொடர்ந்து, நேற்று முன் தினம் காலை துர்காவுக்கு குடும்பக் கட்டுப்பாடு ஆபரேசன் செய்யப்பட்டது. மாலையில் அவருக்கு 106 டிகிரி அளவுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ரத்தப் போக்கும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மருத்துவர்கள், உயர் சிகிச்சைக்காக துர்காவை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த துர்கா, சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் உயிரிழந்தார்.

இதையடுத்து, தனது மனைவிக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்த மருத்துவர்கள் தவறான சிகிச்சையளித்தன் காரணத்தால் தான் தன் மனைவி இறந்துவிட்டார். எனவே, உரிய முறையில் பிரேத பரிசோதனை செய்து, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கணவர் பன்னீர் செல்வம், புளியம்பட்டி போலீசில் புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.