Skip to main content

கோடநாடு வழக்கில் இ.பி.எஸ்ஸுக்கு தொடர்பு உள்ளது; கனகராஜின் சகோதரர் பரபரப்பு குற்றச்சாட்டு

Published on 24/08/2023 | Edited on 24/08/2023

 

Kanagaraj's brother Dhanapal has said EPS is connected with the Kodanad case

 

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருக்கிறது. அவரை விசாரியுங்கள் என உயிரிழந்த கனகராஜின் சகோதரர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 

 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்துள்ள கோடநாடு பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றிருந்தது. இதில், ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 11 பேர் இதில் ஈடுபட்டுள்ளனர் என்று காவல்துறையினருக்குத் தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக கார் ஓட்டுநர் கனகராஜை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி வாகன விபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அதே நேரத்தில் கனகராஜ் அழைத்து வந்த கூலிப்படை 10 பேரையும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். 

 

காவல்துறையினர் நடத்திய தொடர் விசாரணையில், இந்த கொலை சம்பவம் தொடர்பாகச் சில ஆவணங்களை கனகராஜின் சகோதரர் தனபால் அழித்ததாகக் காவல்துறையினருக்குத் தெரியவந்தது. இது சம்பந்தமாக, கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து, தனபாலை ஜாமீனில் விடுவித்தனர். வெளியே வந்த தனபால், கடந்த மாதம் நில மோசடி வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

 

இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு தனபாலுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது செய்தியாளர்கள் வெளியே கூடி நின்றனர்.  அப்போது அவர், “எனது மகள் இரண்டு பேரையும் முதல்வர் தான் காப்பாற்ற வேண்டும். கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு குறித்த கூடுதல் தகவல்களை விரைவில் தெரிவிக்க உள்ளேன்” என்று கூறினார்.

 

இந்த நிலையில் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ள தனபால் சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “ஓட்டுநர் கனகராஜ் எனது தம்பி; அதனால் என்னையும் விசாரித்தார்கள். சிபிசிஐடி போலீசார் வேண்டும் என்றால் என்னை விசாரிக்கட்டும். நான் முழு ஒத்துழைப்பும் அளிப்பதற்குத் தயாராக இருக்கிறேன். கோடநாடு கொலை வழக்கிலும், எனது சகோதரர் மரணத்திலும் எடப்பாடி பழனிசாமிக்குத் தொடர்பு இருக்கிறது என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறேன். ஆனால் இன்று வரை அவரை விசாரிக்கவே இல்லை. நான் பெருந்துறைக்குச் சென்றபோது எடப்பாடி பழனிசாமி கூறியதன் பெயரில்தான் கோடநாடு பங்களாவிலிருந்து 5 பைகளை எடுத்து வந்ததாக கனகராஜ் என்னிடம் தெரிவித்தார். 5 பைகளை எடுத்து வந்து இரண்டு பைகளைச் சேலத்திலும், 3 பைகளை சங்ககிரியிலும் உள்ள முக்கிய புள்ளிகளிடம் கொடுத்துள்ளார்.

 

இதையடுத்து, தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று கனகராஜ் தெரிவித்த நிலையில்தான் ஆத்தூரில் விபத்தில் உயிரிழந்தார். அதில் கனகராஜ் கொடுத்த பைகளில் நிறைய முக்கிய பிரமுகர்கள் பெயர்கள் இருக்கிறது. அதையெல்லாம் நான் காவல்துறையிடம்தான் சொல்ல முடியும்; இப்போது உங்களிடம் சொன்னால் என் உயிருக்குப் பாதுகாப்பிருக்காது. எடப்பாடி காவல் ஆய்வாளர் சுரேஷ் குமார் என்னிடம் இருந்த செல்போன்களை வாங்கி அழித்துவிட்டார். ஆனால் இதனை வெளியே சொல்லக்கூடாது என்று சுரேஷ் குமார் மிரட்டினார். இதையெல்லாம் நான் முன்னாடியே ஏன் சொல்லவில்லை என்றால் அப்போது அதிமுக ஆட்சி இருந்தது. எனக்குப் பயமாக இருந்தால் இதுகுறித்து வெளியே சொல்லவில்லை.

 

ஆனால் இப்போது நடைபெற்றுள்ள ஆட்சி மாற்றத்தால் நான் இவற்றை வெளியே சொல்லுகிறேன். முதல்வர் மீது நம்பிக்கை இருக்கிறது. எனக்கு உரியப் பாதுகாப்பு முதல்வர் கொடுப்பார் என்று நம்புகிறேன். விரைவில் உரிய விசாரணை நடத்தி குற்றவாளிக்குத் தண்டனை வாங்கித் தரவேண்டும்” என்று கூறினார். இதனைத் தொடர்ந்து தற்போது கோடநாடு விவகாரம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.