“ஆங்கிலேயர்களை மிஞ்சும் கொள்ளைக்காரர்கள்” - கமல் காட்டம்!

kamalhasan speech at vilupuram

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசனின்இரண்டு நாள் தேர்தல் பிரச்சாரம்,'விழுப்புரம் - கடலூர்' ஆகிய மாவட்டங்களில் உள்ள செஞ்சி, விழுப்புரம், நெல்லிக்குப்பம் போன்ற பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு கமல்ஹாசன் பேசினார்.

செஞ்சியில் நடந்த கூட்டத்தில் கமல்ஹாசன் பேசும்போது, “எந்த நிலை வந்தாலும் கண்ணியம் தவறமாட்டோம். அவர்கள் எங்களை அவதூறு பேசினால் அதற்கு நேர்மையான பதிலைத் தருவோம். நான் தலைவனாக வேண்டும்; ஆண்டு, அனுபவிக்க வேண்டும் என்பதற்காக இங்குள்ளவர்கள் வரவில்லை. செஞ்சி வந்தால் கோட்டையைப் பிடிக்க வேண்டும். இங்கே ஒரு கோட்டை உள்ளது. அதில் வேண்டுமென்றால் கொடியை நாட்டிக் கொள்ளுங்கள் என்று ஒருவர் சொன்னார். உங்கள் ஆசை நிறைவேற்றும் அமைச்சராக இங்கேயும் வந்து கொடிநாட்டுவோம். எங்கேயும் கொடிநாட்டுவோம். நாங்கள் அல்ல,மக்களான நீங்கள் தான். வீட்டைக் காக்கும் இல்லத்தரசிகள் நாட்டையும் காக்க முன்வர வேண்டும்.

முழு நேர அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் என்று சொல்லும் வார்த்தையே தவறு. உங்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் அவர்கள். அதில், யாரும் தியாகம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. முழு நேர அரசியல்வாதியா என்று என்னைக் கேட்கிறார்கள். யாரும் முழு நேர அரசியல்வாதியாக இருக்கவே முடியாது” என்று பேசினார். இந்தக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விழுப்புரம், யோகலட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில், “முன்பெல்லாம் ஆங்கிலேயர் ஆட்சி நன்றாக இருந்ததாகப் பேசிக்கொள்வார்கள். அப்போது எனக்கு கோபம் வரும். அதைவிடச் சிறந்த தலைவர்கள் வருவார்கள் என்று நம்பினேன். அப்படிப் பல தலைவர்கள் வந்தார்கள். ஆனால், அவர்களின் அடுத்த தலைமுறையினர் ஆங்கிலேயர்களை மிஞ்சும் கொள்ளைக்காரர்களாக மாறியுள்ளனர். இந்தியாவில் முதன்மை மாநிலம் என்ற விருதை தமிழகம் வாங்கியதாகக் கூறுகிறார்கள். அது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. உங்களுக்கு முதலிடம் நான் தருகிறேன். ஊழலிலும், மாநில உரிமைகளை மத்திய அரசிடம் விட்டுக் கொடுப்பதிலும் முதல் இடம் தருகிறேன்.

இந்தப் பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றுப் படுகையில், மணல் கொள்ளை நடக்கிறது. இது உங்கள் சொத்து அதைப் பாதுகாக்க வேண்டும். யாரும் மணலில் கைவைக்கவிடாதீர்கள். என்னைப் பார்த்து வெள்ளை அறிக்கை கேட்கின்றனர். ஆனால், வருமான வரி கட்டியதற்கான சான்று வருமான வரித் துறையிடம் கேட்டுக்கொள்ளுங்கள். மக்களை உற்சாகப்படுத்த வருமான வரித் துறை மூலம் பரிசளிப்பு விழா நடத்தினார்கள். அதில் முறையாக வரி செலுத்தியவர்களுக்கான பரிசு அளிப்பதற்கு என்னை அழைத்தனர். இதுதான் அவர்கள் எனக்குக் கொடுத்த மதிப்பு. நீங்கள் கேட்கும் வெள்ளை அறிக்கைக்கு இதுவே பதில்.

நாங்கள், எங்கள் இயக்கத்தில் பல திட்டங்களை வைத்துள்ளோம். இரண்டு ஆண்டுகளாக அவை வெளியே கூறவில்லை. காரணம் காப்பி அடித்து அவர்களிடம் சென்று சேரக் கூடாது என்பதற்காகவே தான். வாராவாரம் தவறாமல் அறிக்கைகள் உங்களிடம் வந்து சேரும். பிரதமர் ஆட்சிக்கு வரும்போது, காஸ் சிலிண்டர் விலை என்ன இப்போது என்ன?எப்படிப்பட்ட ஆட்சி நடக்கிறது. விவசாயிகள், நெசவாளர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். இதை எல்லாம் எதிர்த்து அவர்களுக்கு நீதி கிடைக்க அழுத்தமான ஒரு குரல் தமிழகத்தில் வந்தே தீரும்.

cnc

நான் தனியாக கத்தி பிரயோஜனமில்லை. நீங்களும் எங்களோடு சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும். நமது எழுச்சி, புரட்சி ஆரம்பித்துவிட்டது. இதை நீங்கள் முன்னின்று நடத்துவீர்கள். ஜனநாயகத்தில் என்னைப் பொறுத்தவரை மக்களே நாயகர்கள். நாங்கள் அதன் சேவர்கள். வரும் தேர்தலில் எங்கள் இயக்கத்தின் சட்டமன்ற வேட்பாளர்களை தேர்வு செய்யும்போது அவர்கள் வெற்றிபெற்று மக்கள் கடமையைச் செய்யத் தவறினால், மக்களிடமிருந்து புகார் வந்தால், அவர்கள் உடனே ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு நீங்கிவிட வேண்டும். இதற்கான ஒப்புதல் கடிதம் கொடுக்க தற்போது தயாராக உள்ளனர். ஆட்சியைக் கைப்பற்றி அதில் செய்ய வேண்டியதைச் செய்து காட்டியபின் கைதட்டலைப் பெறகாத்திருக்கின்றனர். இது நடக்கத்தான் போகிறது” என்று கூறினார்.

kamalhaasan MNM
இதையும் படியுங்கள்
Subscribe