Skip to main content

சாமிகளை இழுத்து ‘பஞ்ச்’ விட்ட கமல்! -அர்ச்சனைக்கு ஆளான எடப்பாடி!

Published on 14/04/2019 | Edited on 14/04/2019

அரசியலுக்கு வந்துவிட்டால், ஓட்டு அவசியமாகிவிடுகிறது. கொள்கை பேசி, வாக்குகளை இழந்துவிட மனம் வராது.  இதற்கு பகுத்தறிவாளர் கமல்ஹாசனும் விதிவிலக்கல்ல.

 

ஒரு தடவை, “நாத்திகன் என்று என்னை அழைப்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அது ஆத்திகர்கள் வசதியாக என்னை அழைப்பதற்காகக் குறிப்பிட்டது. நான் பகுத்தறியவே விரும்புகிறேன்” என்றார் கமல். மேலும் அவர், “நான் கடவுள் மறுப்பாளன்; நாத்திகன் அல்ல. நல்ல பகுத்தறிவாளன்” என்றும் உறுதிபட கூறியிருக்கிறார்.  “நான் கடவுளே இல்லைன்னு சொல்லிக்கிட்டிருக்கேன். நீங்க என்னையே கடவுளுங்கிறீங்களா?” என்று தன்னை ஆழ்வார்பேட்டை ஆண்டவா என்று கோஷமிட்டு அழைத்த ரசிகர்களை அவர் கண்டித்ததும் உண்டு.

 

kamal

 

மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கியது மற்றும் கொடி ஏற்றியது அமாவாசை நாளில் என்பதால், போலி பகுத்தறிவாளர் என விமர்சனத்துக்கு ஆளானபோது “நான் பகுத்தறிவுவாதிதான். ஆனால், என்னிடம் இருக்கும் அனைவருமே பகுத்தறிவாளர்கள் இல்லை. என் அமைப்பில் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். பல்வேறு நம்பிக்கை உள்ளவர்கள் இருக்கிறார்கள். என் வீட்டில், என் மகள்கூட பகுத்தறிவுவாதி இல்லை. நான் கட்சி தொடங்கியிருப்பது, பகுத்தறிவுக் கொள்கையைப் பரப்பி, மூட நம்பிக்கையை ஒழிப்பதற்காக அல்ல. ஏழ்மையையும், ஊழலையும் ஒழிப்பதற்காகவே அரசியலுக்கு வந்திருக்கிறேன்.” என்று விளக்கம் தந்தார்.

 

 

அரசியலுக்காகத் தனிப்பட்ட கொள்கையைக்கூட முன்புபோல் அழுத்தமாக வெளிப்படுத்த முடியாத கமல்ஹாசன்,  ஏதாவதொரு விதத்தில், சாமிகள், தெய்வங்கள் குறித்த விஷயங்களை, தேர்தல் களத்தில் அவ்வப்போது பேசிவிடுகிறார். விருதுநகர் அம்மன்கோவில் திடலில் அவர் இப்படி பேசியிருக்கிறார் -   

 

kamal

 

“உங்கள் பக்தி.. உங்கள் தெய்வங்கள்.. அப்படியே  இருக்கும்.. இவங்க பக்தி, தெய்வம் போட்டுட்டு வர்றதெல்லாம் வேஷம். இவங்க பக்தி.. இவங்கள்லாம் வர்றதுக்கு முன்னாலயே உங்களுக்கு சாமிகளெல்லாம் இருக்கு. இவங்க புதுசாமி கொண்டுவந்து வைப்பாங்க. அதை மறந்துடாதீங்க.  உங்களுக்குத் தெரியலியா? அவங்க எந்த சாமி இருக்கணும்னு நம்புறாங்கன்னு. ஒரு படமே எடுத்துப் போட்டாங்களே.. எந்த சாமிக்கு அர்ச்சனை பண்ணனும்னு. அதனால அந்த சாமியையெல்லாம் நம்பிடாதீங்க. நீங்க நம்புற சாமியை நம்பிட்டிருங்க. நான் மக்களை நம்புகிறேன். அவர்கள்தான் எனக்கு நம்பிக்கையூட்டும் போரொளி.” என்று போகிறபோக்கில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ’பஞ்ச்’ விட்டார்.

 

kamal

 

“அரசியலில் துணிச்சலாக இறங்கிவிட்ட பிறகு, எதற்காக எல்லா சாமிகளையும் இழுத்து, பம்மிக்கொண்டு பேசுகிறார் கமல்? நேரடியாக மக்களிடம், தமிழகத்தில் தியேட்டர்களில் காட்டப்படும் அரசு விளம்பரத்தில், “சாமி பெயருக்கு..” என்று சொல்லிவிட்டு,   “நம்ம தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஐயா பெயருக்கு” என்று ஒரு பெண் சொன்னதை நீங்கள் பார்த்திருப்பீர்கள் அல்லவா? எடப்பாடி பழனிச்சாமி எப்போது தமிழக மக்களுக்குச் சாமியானார்? என்று அனைவருக்கும் புரியும்படி விபரமாகப் பேசியிருக்கலாமே?” என்று அந்த இடத்திலேயே ‘கமெண்ட்’ அடித்தது ஒரு பொதுஜனம்!

 

அனைவருக்கும் புரியும்விதத்தில் பேசினால் அவர் கமல்ஹாசனே அல்ல!

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

5 ஓ.பி.எஸ்.கள் விவகாரம்; எடப்பாடியின் அசர வைத்த பதில்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
5 OPS issue; Edappadi's shocked response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில், மதுரையில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் மற்றும் மதுரை அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, 'மதுரையில் அதிமுகதான் அமோக வெற்றி பெறும். அதிமுக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கு இருக்கிறது. இதனால் எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெரும். அதேபோல் விளவங்கோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு பன்னீர்செல்வத்தை தோற்கடிக்க ஐந்து பன்னீர் செல்வங்கள் தேர்தலில் போட்டியிட்டு உள்ளார்களே' என்ற கேள்விக்கு, ''என்னங்க இது சுதந்திர நாடுங்க. பன்னீர்செல்வமும் ஒன்றுதான், நானும் ஒன்றுதான் இங்கு நிற்கின்ற வேட்பாளர் ஒன்றுதான், நீங்களும் ஒன்றுதான். எல்லாரும் சமம்தான். இது மிகப்பெரிய ஜனநாயக நாடு. இதில் இவர் பெரியவர் அவர் பெரியவர் என்று அல்ல. மக்கள் யார் பெரியவராக நினைக்கிறார்களோ அவர்கள் தான் பெரியவர். அங்கு 5 ஓ. பன்னீர் செல்வம் நிற்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். அப்பொழுது அவர்களெல்லாம் தகுதி இல்லாதவர்களா? அந்த வேட்பாளர்களுக்கு தகுதி இருக்கிறது என்று தேர்தலில் நிற்கிறார்கள்'' என்றார்.

ஓபிஎஸ்-ஐ அதிமுகவிலிருந்து நீக்கியது 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவு. எடப்பாடி பழனிசாமி நான் எடுத்த முடிவு அல்ல. தனிப்பட்ட முறையில் திட்டமிட்டு சிலவற்றை கற்பனையாக வெளியிடுவது தவறு. ஒட்டுமொத்தமாக அதிமுக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவுப்படி தான் நான் செயல்படுகிறேன். திமுக மாதிரி வெளியில் வீர வசனம் பேசவில்லை. நாங்கள் பிரதமரை எதிர்க்கிறோம் என்று வெளியில் வீர வசனம் பேசுகிறார்கள் கறுப்பு குடை பிடித்தால் அவர் கோபித்துக் கொள்வார் என்று வெள்ளைக் குடை பிடிக்கிறார்கள். அப்படிப்பட்ட தலைவர் தான் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். ஓடோடி போய் தமிழ்நாட்டில் திட்டங்களை துவக்கி வைக்க மோடியை அழைக்கிறார் முதல்வர். அங்கு சரணாகதி இங்கு வீர வசனம். இதுதான் திமுகவின் இரட்டை வேடம்'' என்றார்.

Next Story

“பேராசான் பிறந்த இடத்திலிருந்து தொடங்குகிறேன்” - கமல்ஹாசன்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kamalhassan mnm campaign begins with erode

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தமாக ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க-வுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் விவரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

இந்த நிலையில் முதற்கட்டமாக ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.