
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அருகே உள்ள தெற்குவாடி மீனவ கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஷோபனா அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். பெற்றோர் இருவரும் கூலி வேலைக்குச் செல்கின்றனர். வறுமையான குடும்பச் சூழலிலும், கடினமாக படித்து நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவி ஷோபனா 600க்கு 562 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியிலேயே முதல் மாணவியாக சாதனை படைத்துள்ளார்.
கல்லூரி படிப்பை முடித்துவிட்டு குடிமை பணித்தேர்வு எழுதி மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்த மாணவி ஷோபனாவுக்கு, குடும்பத்தின் கடன் சுமையால் உயர்கல்வியைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. அதன் காரணமாக ஜவுளிக்கடை ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். இந்த தகவல் சமூக வலைதளங்களில் தீயாக பரவியது.
இந்த நிலையில் தான் மாணவி ஷோபனா குறித்து அறிந்த நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், மாணவியை சென்னைக்கு அழைத்து, அவரது படிப்பைத் தொடரவும், சிவில் சர்விஸ் தேர்வுக்கு தயாராவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தனது கமல் பண்பாட்டு மையம் சார்பில் செய்துகொடுத்தார்.