Advertisment

கமல் கறார் - லேட்டாகும் ம.நீ.ம, தி.மு.க கூட்டணி

Kamal Strong-Late MNM DMK alliance

Advertisment

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அமைந்த கூட்டணி நீடிப்பதால் திமுக தொகுதிப் பங்கீடு வரை சென்றுள்ளது. ஆனால், அதிமுக தற்போது வரை கூட்டணியை உறுதி செய்ய முடியாமல் பேச்சுவார்த்தையை நீட்டித்து வருகிறது. மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகியவை இன்று திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இரண்டு கட்சிகளும் ஒரு இடத்தை கேட்டிருப்பதாக தகவல்வெளியாகியுள்ளது. மேலும் மக்கள் நீதி மய்யம் விரைவில் திமுகவிடம் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

'திமுக கூட்டணி கட்சிகளின் கொள்கைகள் ஈர்ப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருப்பதால் மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணியில் இணைவது இயற்கையானது' என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இரண்டு தொகுதிகளைக் கேட்பதாகவும், திமுக ஒரு தொகுதியை மக்கள் நீதி மய்யத்திற்கு ஒதுக்க முன்வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

Advertisment

கடந்தமூன்று வாரத்திற்கு மேலாக மக்கள் நீதி மய்யம் தரப்பினர் திமுகவிடம் மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை தாமதமாகி வரும் நிலையில், அந்த தாமதத்திற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. திமுக தரப்பில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட்டால், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றுநிபந்தனை விதித்துள்ளதாகவும், ஆனால், தாங்கள் திமுக கூட்டணியில் போட்டியிட்டாலும் டார்ச் லைட் சின்னத்தில் மட்டும் தான் போட்டியிடுவோம் என கமல்ஹாசன்கறாராகஇருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த டிசம்பர் மாதமே தேர்தல் ஆணையத்தில் மக்கள் நீதி மய்யம் சின்னத்திற்காக விண்ணப்பித்திருந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் தான் மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச் லைட் சின்னத்தை அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையம் ஒதுக்கி ஒப்புதல் அளித்திருந்தது. எனவே போட்டியிட்டால் டார்ச் லைட் சின்னத்தில்தான் போட்டியிடுவேன் என மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது. இரண்டு தொகுதிகள் வேண்டும் என பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் தற்போது மக்கள் நீதி மய்யம் ஒரு மக்களவைத் தொகுதியும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் கேட்டுபேச்சுவார்த்தையை முன் வைத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

kamalhaasan parliment
இதையும் படியுங்கள்
Subscribe