2024ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலின் போது திமுக உடன் ஏற்பட்ட கூட்டணி உடன்படிக்கையில் 2025ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து தமிழ்நாட்டில் 6 நாடாளுமன்ற மாநிலங்களை உறுப்பினர்களின் பதவிக்காலம் இன்றுடன் (24.07.2025) முடிவடைகிறது. இதற்காகக் கடந்த ஜூன் மாதம் புதிய உறுப்பினர்களுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது. 

முன்னதாக ஏற்படுத்தப்பட்ட கூட்டணி உடன்படிக்கையின் படி கமல்ஹாசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராகப் போட்டியின்றி தேர்வானார். இதனையடுத்து நாளை (25.07.2025) புதிய மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் தொடங்குகிறது. அதனால் நாளை பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டு கமல்ஹாசன் பதவியேற்கவுள்ளார். இதனால் அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்நிலையில் டெல்லி செல்வதற்காகச் சென்னை விமான நிலையத்திற்கு கமல்ஹாசன் வந்திருந்தார். அங்கு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

அப்போது அவர் பேசுகையில், “மக்களின் வாழ்த்துக்களுடன் உறுதிமொழி எடுக்கவும், என் பெயரைப் பதிவு செய்யவும் செல்கிறேன். இந்தியனாக எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் மரியாதையும் கடமையும் நான் செய்யப்போகிறேன் என்பதை ஒரு பெருமையோடு தான் சொல்லிக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார். அப்போது செய்தியாளர், “மாநிலங்களவை கன்னிப் பேச்சு எதை மையப்படுத்தி இருக்கும் எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் பதிலளித்துப் பேசுகையில், “அது பற்றி இப்போது சொல்லக்கூடாது அங்கே தான் பேசவேண்டும். சில விஷயங்கள் இங்கே பேசுகிற மாதிரி அங்கே பேசக்கூடாது. அங்க பேசுகிற மாதிரி இங்கே பேசக்கூடாது” எனத் தெரிவித்தார்.