Skip to main content

கல்லணை கால்வாய்க்கரை வீரமாகாளியம்மன் கோயில் முளைப்பாரித் திருவிழா!

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
Kallanai Canal Bank Veeramakaliamman Temple Mulaipari Festival

தை முதல் நாளில் தொடங்கும் திருவிழாக்கள் கிராமங்களில் களைகட்டி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மாசிமகத் திருவிழா கிராம மக்களை குதூகலப்படுத்தியது. அதிலும் புதுக்கோட்டை மாவட்டம் குளமங்கலம் வில்லுனி ஆற்றங்கரையில் எழுந்தருளியுள்ள ஆசியாவில் உயரமான குதிரை சிலை கொண்ட பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் மாசிமகத் திருவிழாவில் லட்சம் பேர் திரண்டிருந்தனர். ஆட்டம், பாட்டமும், சர்க்கஸ் கலை நிகழ்ச்சிகளும் பஞ்சமில்லாமல் நடந்தது.

Kallanai Canal Bank Veeramakaliamman Temple Mulaipari Festival

அதே போல தான், புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு கிராமத்தில் கல்லணைக் கால்வாய் ஆற்றங்கரையில் எழுந்தருளியுள்ள வீரமாகாளியம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. காப்புக் கட்டியதும் ஒவ்வொரு வீட்டிலும் விரதமிருந்து மண் சட்டிகள், உட்பட பல்வேறு பாத்திரங்களில் நவதானிய விதைகள் தூவி வீட்டுக்குள்ளேயே வைத்து சிறப்பு வழிபாடுகளுடன் வளர்த்து வந்த முளைப்பாரியை தாரை தப்பட்டை முழங்க வான வேடிக்கைகளுடன் கிராம மக்கள் நேற்று ஊர்வலமாக தூக்கிச் சென்று, மண்ணடித் திடலைச் சுற்றி ஒன்று சேர்ந்து கல்லணைக் கரையோரம் உள்ள பெரிய குளத்தில் விட்டனர். 

மேலும் முளைப்பாரியுடன் கொண்டு வந்த படையல் பொருட்களை ஒரே இடத்தில் குவித்து வைத்து படையலிட்டு வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சார்ந்த செய்திகள்