Advertisment

இளைஞர் மர்ம மரணம்! நண்பர் வீட்டு முன் சடலத்தை வைத்து உறவினர்கள் போராட்டம்! 

Kallakurichi Youth passes away in chennai Family struggle

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகில் உள்ள அரசம்பட்டு எனும் ஊரைச் சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது மகன் சிவசங்கரன் (எ) கோபி(26). பி.இ. பட்டதாரியான இவர், பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊரான அரசம்பட்டு வந்துள்ளார். கடந்த 1ம் தேதி அதே கிராமத்தைச் சேர்ந்த அவரின் நண்பர்கள் தாமோதரன், ஆனந்த் ஆகியோருடன் சேர்ந்து மூவரும் சென்னைக்குச் சென்றுள்ளனர். சென்னைக்குச் சென்ற மூவரில் தாமோதரன், ஆனந்த் மட்டும் சொந்த கிராமத்துக்குத் திரும்பி வந்துள்ளனர். கோபி மட்டும் வீடு திரும்பவில்லை.

Advertisment

இதுகுறித்து கோபியின் தாய், தாமோதரன், ஆனந்த் இருவரிடமும் விசாரித்துள்ளார். அப்போது, கோபி சென்னையிலேயே தங்கியிருக்கிறார் என்று சொல்லியிருக்கிறார்கள். சில நாட்கள் கடந்தும் கோபி ஊருக்கும் வரவில்லை. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது தாய் முனியம்மாள், கோபியுடன் சென்னைக்குச் சென்ற தாமோதரன், ஆனந்த் ஆகிய இருவரையும் சென்னைக்கு அழைத்துச் சென்று, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தனது மகன் கோபியைக் காணவில்லை எனப் புகார் அளித்துள்ளார். போலீசார் அந்த புகார் மீது விசாரணை நடத்தினர்.

Advertisment

அதேசமயம், மெரினா கடற்கரையில் உள்ள கண்ணகி சிலை அருகே கடந்த 2ஆம் தேதி மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத இளைஞரின் உடலைக் கோபியின் தாயிடம் காட்டி அவரது உடலா என அடையாளம் காட்டும் படி போலீசார் கேட்டுள்ளனர். அதில் இறந்து கிடந்தது தனது மகன் கோபி தான் என அவர் உறுதி செய்தார்.

அதன்பிறகு கோபியின் உடலை பிரேதப் பரிசோதனை செய்து அவரது சொந்த கிராமமான அரசம்பட்டுக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். ஊருக்குக் கொண்டு வந்த கோபியின் பிரேதத்தை, சென்னைக்கு கோபியுடன் சென்ற அவரது நண்பர்கள் தாமோதரன் மற்றும் ஆனந்த் வீட்டின் முன்வைத்து உறவினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த சங்கராபுரம் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, கோபி மரணத்தில் சந்தேகம் உள்ளது. மூவரும் சென்னைக்குச் சென்ற நிலையில் தாமோதரன் மற்றும் ஆனந்த் மட்டும் திரும்பிவந்தனர். அவர்களிடம் கேட்டபோது, கோபி சென்னையில் தங்கிவிட்டதாகத் தெரிவித்தனர். தற்போது கோபி மர்மமான முறையில் இறந்துள்ளார். எனவே மேற்குறிப்பிட்ட இருவரையும் கைது செய்ய வேண்டும் எனத் தெரிவித்தனர்.

அதற்கு காவல்துறையினர், மரணம் குறித்து புகார் அளியுங்கள் அதன் பிறகு விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களிடம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து கோபி உடலை எடுத்து அடக்கம் செய்தனர்.

police kallakurichi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe