Skip to main content

முதல் திருமணத்தை மறைத்து 2ஆவது திருமணம் செய்த போலீஸ்காரர் சஸ்பெண்ட்!

Published on 20/08/2020 | Edited on 21/08/2020

 

Kallakurichi

 

கன்னியாகுமரியைச் சேர்ந்தவர் வேல்முருகன், வயது 35. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி முத்துலட்சுமி உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள நன்னாவரம் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச் செல்வி. வயது 32 இவர் ஒரு வழக்கு சம்பந்தமாக திருநாவலூர் காவல் நிலையத்திற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது வேல்முருகனுக்கும், தமிழ்ச்செல்விக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. வேல்முருகன்  தனக்கு திருமணம் ஆகவில்லை என்று தமிழ்ச்செல்வியிடம் கூறியுள்ளார்.  அதை தமிழ்ச்செல்வியும் நம்பிவிட்டார். இருவரும் காதலித்துள்ளனர்.

 

கடந்த 2018 ஆம் ஆண்டு  அக்டோபர் 25ஆம் தேதி தமிழ்ச்செல்வியை போலீஸ்காரர் வேல்முருகன் திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆன சில மாதங்களில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தமிழ்ச் செல்வியுடன் வேல்முருகன் சேர்ந்து வாழ மறுத்துள்ளார். தன்னுடன் வேல்முருகனை சேர்த்து வைக்கக்கோரி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தமிழ்ச்செல்வி புகார் அளித்துள்ளார்.

 

ஆனால் அந்த புகார் தொடர்பாக மகளிர் காவல்துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரது புகார் கிடப்பில் போடப்பட்டு கிடந்துள்ளது. இந்த நிலையில் மாவட்ட எஸ்.பி. ஜியாவுல் ஹக் அவர்களிடம் மீண்டும் புகார் அளித்துள்ளார் தமிழ்ச்செல்வி. மாவட்ட எஸ்.பி. உத்தரவின்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், முதல் திருமணத்தை மறைத்து தமிழ்ச்செல்வியை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்த போலீஸ்காரர் வேல்முருகனை, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் சஸ்பெண்ட் செய்துள்ளார்.

 

இருதினங்களுக்கு முன்பு வரஞ்சரம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த ஜம்புலிங்கம் என்பவர் அவரது மனைவி சிந்துவிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக இதே உளுந்தூர்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் சிந்து. அதனடிப்படையில் டி.ஐ.ஜி. எழிலரசன் ஜம்புலிங்கத்தை சஸ்பெண்ட் செய்துள்ளார்.

 

பொது மக்களின் குடும்பங்களில் ஏற்படும் வரதட்சணை கொடுமை, காதலித்து ஏமாற்றுவது, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் இவைகளையெல்லாம் விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டிய காவல்துறையில் உள்ளவர்களே மனைவியை வரதட்சணை கொடுமை செய்வதும், பெண்களை ஏமாற்றிக் மறுமணம் செய்வதும், வேலியே பயிரை மேயும் கதையாக உள்ளது. இப்படிப்பட்டவர்கள் பொதுமக்களுக்கு எதிரான குற்றங்கள் மீது கொடுக்கப்படும் புகார்களை எப்படி விசாரணை செய்து நீதியை நிலைநாட்டுவார்கள். காவல்துறையில் புரையோடிப்போயுள்ள இப்படிப்பட்டவர்களை சஸ்பெண்ட் செய்வதைவிட, பணிநீக்கம் செய்து அவர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவுசெய்து  நீதிமன்றம் மூலம் கடுமையான தண்டனைகள் பெற்றுத் தந்தால்தான் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவது குறையும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்