Skip to main content

"நான்தான் அவரை சுத்தியால் அடித்துக் கொன்றேன்!" - மனைவி வாக்குமூலம்!

Published on 09/03/2021 | Edited on 09/03/2021

 

In kallakurichi wife is the reason for husband passes away

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள செம்பளாகுரிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் மருதமுத்து(45). அவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு பெருமாள்(23) என்ற மகனும் பூவரசி(21) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் திருமணம் முடிந்து தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்த நிலையில், மருதமுத்துவுக்கு ஒரு மாடி வீடும், ஒரு கூரை வீடும் உள்ளது. அந்தக் கூரை வீட்டில் அவரது மகனும் மருமகளும் வசித்து வருகின்றனர். மாடி வீட்டில் மருதமுத்து அவரது மனைவி சித்ராவுடன் வசித்து வருகிறார்.

 

மருதமுத்துவுக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது மனைவி சித்ரா அதே பகுதியில் உள்ள அவர்களது உறவினர் வீட்டிற்கு கோபித்துக்கொண்டு சென்று, இரவு தங்கியுள்ளார். நேற்று காலை 7 மணி அளவில் இவர்களது மகள் பூவரசி தந்தையைப் பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மருதமுத்து சுத்தியலால் தாக்கிக் கொலை செய்யப்பட்டுக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே, இது குறித்து உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளார் பூவரசி. அவர்கள் மூலம் காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதையடுத்து கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராமநாதன், சின்னசேலம் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, கீழ்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்த மருதமுத்துவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை சம்பவம் குறித்து அவரது மனைவி மற்றும் உறவினர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது மருதமுத்துவின் மனைவி சித்ரா, தனது கணவரை சுத்தியலால் அடித்துக் கொலை செய்ததாக போலீசில் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவனை மனைவியே சுத்தியலால் அடித்துக் கொலை செய்த சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்