Skip to main content

கைகான் வளைவு நீர் ஆதாரம் விவகாரம்; இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் தோழமை கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

Published on 16/10/2020 | Edited on 16/10/2020

 

kallakurichi water resource issue

 

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உற்பத்தியாகும் கைகான் வளைவு நீர் ஆதாரம் பன்னெடுங்காலமாக மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அணைக்கு வந்து சேர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மலைப் பகுதி பிரதேசத்திலும் சமவெளிப் பகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களுக்கு பாசன வசதி தருவதோடு குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. 

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்ட சூழலில் மாவட்டத்தின் வளர்ச்சிக்கும் விவசாய மேம்பாட்டிற்கும் கூடுதல் திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்த வேண்டிய தமிழக அரசோ, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களோ அவரது சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்திற்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நீர் ஆதாரமான கைகான் வளைவு நீராதாரத்தை திருப்பிவிடக் கூடிய வகையில் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள புதிய கைகான் வளைவு திட்டம் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம்  கரியக்கோயில் நீர்தேக்கத்திற்கு சென்றடையும். 

 

இப்படி மாற்றி அமைப்பதால் கள்ளக்குறிச்சி மாவட்டம் தனது  நீராதாரத்தை முற்றிலும் இழந்து விடும். இதனை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் பழங்குடி மக்கள் சங்கமும் தொடர்ச்சியான போராட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருங்கிணைப்பில் திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் வடக்கனந்தல் பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.

 

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கணக்கானோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதோடு தமிழக அரசாங்கத்திற்கு எதிராகவும் எடப்பாடி பழனிசாமியை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பியதால் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை பழங்குடி மக்கள் சங்கத்தின் மாநில துணை செயலாளர் ஆர்.சின்னசாமி துவக்கி வைத்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.வி.சரவணன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் க.ஜெய்சங்கர், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் தனபால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னணி பொறுப்பாளர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச்செயலாளர் கே. இராமசாமி, கல்வராயன் மலை ஒன்றிய செயலாளர் சி.முருகன், ஒடுக்கப்பட்டோர் வாழுரிமை இயக்கத்தின் மாவட்டத்தலைவர் ஏ.ஆர்.கே.தமிழ்ச்செல்வன்,உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கைதாயினர்.

 

 

 

சார்ந்த செய்திகள்