Kallakurichi two teenage issue

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜா நேற்று ஒருவழக்கு விசாரணை சம்பந்தமாக தொட்டியம் என்ற பகுதிக்கு சென்று விசாரணை முடித்துக்கொண்டு காவல் நிலையம் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தொட்டியம் சுண்ணாம்பு ஓடை அருகே ஒரு இளம் பெண் கழுத்தில் கத்திக்குத்து காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

Advertisment

அதை பார்த்த இன்ஸ்பெக்டர் ராஜா அவரது வாகனத்தில் அந்த இளம்பெண்ணை ஏற்றி விரைந்து கொண்டுசென்று கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை தீவிரப்பிரிவில் சிகிச்சையில் சேர்த்துள்ளார். அந்தப் பெண் கழுத்தில் கத்திக்குத்து காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தது ஏன்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்துள்ளார். அதில் தொட்டியம், அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் செல்வி தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் ஒரு மகன் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வேலை தேடி இன்பத்துடன் சென்னை சென்றுள்ளனர். அங்கு உள்ள சேலையூர் பகுதியில் தங்கி உள்ளனர். இந்த நிலையில் கரோனா பரவல் காரணமாக கோவிந்தன் தன் குடும்பத்தினருடன் தனது சொந்த ஊரான தொட்டியத்திற்கு வந்து சில மாதங்களாக குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

Advertisment

இவர் சென்னையில் இருந்தபோது இவரது வீட்டுக்கு அருகில் வசித்துவந்த நாமக்கல்லைச் சேர்ந்த சதீஷ் என்ற இளைஞனுக்கும் கோவிந்தன் மகளுக்கும் காதல் இருந்து வந்துள்ளது. கோவிந்தன் சொந்த ஊருக்கு வந்துவிட்ட பிறகும் அவரது மகளும் சதீஷ் என்ற அந்த வாலிபரும் தொலைபேசி மூலம் தங்கள் காதலை தொடர்ந்துள்ளனர். இந்த நிலையில்தான் நேற்று மாலை ஐந்தரை மணி அளவில் கோவிந்தன் மகள் தொட்டியம் சுண்ணாம்பு ஓடை பகுதியில் தொண்டையில் கத்தி குத்து பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

அவரை மீட்டு மருத்துவமனையில் இன்ஸ்பெக்டர் ராஜா சிகிச்சைக்காக சேர்த்து தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அந்த இளம்பெண்ணின் காதலன் சதீஷ் அவரை சுண்ணாம்பு ஓடை அருகே வரவழைத்து இருவரும் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது சதீஷ் தன் காதலியான இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறும் திருமணத்தை எப்போது நடத்தலாம் என்றும் கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண் திருமணம் செய்து கொள்ள மறுத்ததாகவும் இதனால் இருவருக்கும் வாக்குவாதமாகி அதில் கோபமுற்ற சதீஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்த பெண்ணின் கழுத்தில் குத்திவிட்டு டூவீலரில் தப்பி ஓடியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisment

இது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்த சின்னசேலம் போலீசார் அந்த இளைஞர் சதீஷைதேடிவந்தனர். போலீஸ் தேடுவதை அறிந்த சதீஷ் எப்படியும் நம்மை போலீஸ் கைது செய்துவிடும் அந்த பெண் உயிருடன் இருப்பாரோ இறந்து விடுவாரோ எது நடந்தாலும் நான் போலீசில் சிக்கினால் கைது செய்து நமக்கு நீதிமன்றத்தின் மூலம் தண்டனை கிடைக்கும் என்று எண்ணி பயந்துபோன அந்த இளைஞன் சதீஷ், சேலம் அம்மாபேட்டை மின்வாரிய அலுவலகம் பின்புறம் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவரால் கத்திக்குத்து காயம்பட்ட இளம்பெண் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.