kallakurichi surrounding incident three members involved 

கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், சின்னசேலம், உளுந்தூர்பேட்டை ஆகிய பகுதிகளில் ஆளில்லாமல் பூட்டி கிடக்கும் வீடுகள், கடைகள், டாஸ்மாக் ஆகியவற்றில் கொள்ளையர்கள் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து கொண்டு வந்து பூட்டை உடைத்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள்தொடர்ந்து நடைபெற்று வந்தன.

Advertisment

இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்நிலையங்களிலும் காவல்துறையினரின்இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்தி உத்தரவிட்டார். அதன்படி போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

Advertisment

இந்நிலையில் வடபொன்பரப்பி காவல்நிலைய பகுதியில் உள்ள புதூர் கூட்டு ரோட்டில் சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அந்த காரில் இரு ஆண்கள் மற்றும் ஒரு பெண் என மூன்று பேர் இருந்தனர். சந்தேகத்திற்கிடமான வகையில் அவர்கள் இருந்ததால் அவர்களை காவல்நிலையம் அழைத்து சென்று போலீசார்விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அவர்கள் சென்னையைச் சேர்ந்த கார்த்திக் (வயது 19),பாலாஜி (வயது 23), சிந்து (வயது 23) என்பதும், இவர்கள் மூவரும் பகண்டை கூட்டு ரோடு பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் தங்கிக்கொண்டு அங்கிருந்தபடி ரிஷிவந்தியம், வடபொன்பரப்பி, தியாகதுருவம்,சங்கராபுரம், மூங்கில்துறைபட்டு, சின்னசேலம், திருக்கோவிலூர்உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று கொள்ளையடித்து வந்துள்ளனர் என்பதும் தெரிய வந்தது.

மேலும், திருக்கோவிலூர் அருகே உள்ள கனகநந்தல் கிராமத்தில் உள்ள அரசு டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்களை திருடிச் சென்றுள்ளனர். பிடிபட்ட மூவரிடமிருந்து சுமார் 15 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள், ஒரு கார், இரண்டு இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.

மேலும், திருடிய நகைகளை விற்று அந்த பணத்தில் சங்கராபுரம் பகுதியில் புது வீடு கட்டுவதற்காக வீட்டுமனை ஒன்றையும் அவர்கள்வாங்கியுள்ளது தெரிய வந்துள்ளது. மூவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற உத்தரவின் பெயரில் சிறையில் அடைத்தனர்.