Skip to main content

கரும்பு காட்டில் கள்ளச்சாராய ஊறல்; போலீசார் அதிர்ச்சி

Published on 08/03/2023 | Edited on 08/03/2023

 

kallakurichi sugarcane garden incident police shocked 

 

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மோகன்ராஜ் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சப் பயன்படும் சாராய ஊறல்களை அழிப்பது, கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், கள்ளச்சாராயம் கடத்தல் மற்றும் விற்பனை செய்பவர்களை கைது செய்வது போன்ற அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

 

இந்நிலையில், 07.03.2023 அன்று வரஞ்சரம் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் குணசேகர் தலைமையிலான தனிப்படை காவலர்கள் வேங்கைவாடி கிராமத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது அப்பகுதியில் உள்ள கரும்பு காட்டில் மறைத்து வைத்திருந்த கள்ளச்சாராயம் காய்ச்சப் பயன்படுத்தப்படும் புளித்த சாராய ஊறல் ஒரு 200 லிட்டர் பிளாஸ்டிக் பேரலில் கண்டுபிடித்து சம்பவ இடத்திலேயே கொட்டி அழித்தனர்.

 

மேலும், இந்த சட்டவிரோதச் செயலில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ள குற்றவாளியைப் பிடிக்க தனிப்படை காவலர்கள் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு  விற்பனைக்கு அனுப்புவார்கள். காவல்துறையினர் அவ்வப்போது மலைக்குச் சென்று அங்குள்ள சாராய ஊறல்களைக் கண்டறிந்து அழிப்பது, கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை கைது செய்வது எனத் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வரும் வேளையில், தரைப்பகுதியில் உள்ள வரஞ்சரம் பகுதியில் கரும்பு காட்டில் சாராயம் காய்ச்சும் தொழிலைத் துவங்கியுள்ள சம்பவம் காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை; இருவர் கைது

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
Prohibited lottery sales; Two arrested

தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனையைத் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதனடிப்படையில், ஈரோடு தாலுகா போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உட்பட்ட சென்னிமலை, ரோடு, கே.கே. நகர் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அங்குள்ள துணி சலவை செய்யும் கடையின் அருகில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இருவரைப் பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் இருவரும் காசி பாளையத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் (38), பூவரசன் (27) என்பது தெரியவந்தது.மேலும், விசாரணையில், அவர்கள் இருவரும் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகளின் எண்கள் எழுதப்பட்ட வெள்ளை தாள்கள் 10, 2 செல்போன் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

Next Story

கள்ளக்குறிச்சி சென்ற சாட்டை துரைமுருகன்; சூழ்ந்துகொண்ட திமுகவினர்; கைகலப்பால் பரபரப்பு

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
nn

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 27 பேரும், சேலம் மருத்துவமனையில் 15 பேரும், விழுப்புரம் மருத்துவமனையில் 4 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேர் என மொத்தம் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 4 பெண்களும் அடங்குவர். மேலும் 89 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் எனப் பலரும் கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்திற்கு இரங்கல்களையும், தடுக்க தவறியதாக ஆட்சி நிர்வாகத்திற்கு கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியும், 'சாட்டை' என்ற யூடியூப் சேனல் நடத்தி வருபவருமான சாட்டை துரைமுருகன் கள்ளக்குறிச்சி சென்றுள்ளார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொன்ன நிலையில், ஒரு இடத்தில் சூழ்ந்துகொண்ட அந்தப்பகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்கள் சிலர் சாட்டை துரைமுருகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் சிலர் சாட்டை துரைமுருகனை தாக்க முயன்றனர். கைகலப்பில் ஈடுபடும் அளவிற்கு சூழ்நிலை உருவானதால் அங்கிருந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் அவரை காரில் ஏற்றி அனுப்பிவைத்தனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண சம்பவத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொடர்பிருப்பதாக சாட்டை துரைமுருகன் வீடியோ வெளியிட்டிருந்த நிலையில் திமுக எம்.எல்.ஏ ஆதரவாளர்கள் கள்ளக்குறிச்சியில் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.