Skip to main content

முடிந்த புரட்டாசி... கல்லா கட்டிய கள்ளக்குறிச்சி...

Published on 19/10/2021 | Edited on 19/10/2021

 

kallakurichi sheep market

 

கடந்த மாதம் புரட்டாசி என்பதால் அசைவ உணவுகள் மற்றும் இறைச்சி, முட்டை விற்பனை என்பது மந்தமானது. இந்நிலையில், தமிழ் மாதம் புரட்டாசி முடிந்து ஐப்பசி மாதம் பிறந்ததால் மீண்டும் அசைவ உணவுகள் மற்றும் இறைச்சி விற்பனை அதிகரித்துள்ளது. ரம்ஜான், பக்ரீத் உள்ளிட்ட பண்டிகைகளின்போது ஆட்டுச் சந்தைகளில் ஆடு விற்பனை என்பது விண்ணைத்தொடும். குறிப்பிட்ட பண்டிகை சமயங்களில் கோடி ரூபாய் கணக்கில் ஆடுகள் விற்பனை சூடுபிடிக்கும்.

 

இந்நிலையில் புரட்டாசி மாதம் முடிந்ததால் கள்ளக்குறிச்சி ஆட்டுச் சந்தையில் இன்று (19.10.2021) ஆடு விற்பனை ஜோராக நடைபெற்றது. கள்ளக்குறிச்சி,  ரிஷிவந்தியம் ஆட்டுச் சந்தையில் இன்றுமட்டும் ஒருகோடி ரூபாய் மதிப்புள்ள ஆடுகள் விற்பனையானதாக ஆட்டு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். புரட்டாசி முடிந்த கையோடு ஒருகோடி ரூபாய் கல்லாகட்டிவிட்டது ரிஷிவந்தியம் ஆட்டுச் சந்தை.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

தேர்தல் விதிமுறையால் மந்தமான ஈரோடு ஜவுளி சந்தை

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

ஈரோடு கனி மார்க்கெட் பகுதியில் தினசரி கடை, வார சந்தை நடைபெற்று வருகிறது. திங்கட்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறும் வாரச்சந்தை தென்னிந்திய அளவில் மிகவும் புகழ் பெற்றது. இந்த ஜவுளி வார சந்தைக்காக கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து மொத்த விலையில் துணிகளைக் கொள்முதல் செய்வார்கள்.

சாதாரண நாட்களில் ரூ.2 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களில் ரூ.6 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். இந்த ஜவுளி சந்தையானது ஈரோடு பார்க் மட்டுமின்றி சென்ட்ரல் தியேட்டர், அசோகபுரம் போன்ற பகுதிகளிலும் செயல்படும். இந்நிலையில் பாராளுமன்றத் தேர்தல் அறிவிப்பு கடந்த மாதம் 16ஆம் தேதி வெளியானது. தேர்தல் அறிவிப்பு வெளியான உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன. இதனால் ரூ.50,000 க்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லும் பணங்களைத், தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இதனால் ஈரோடு ஜவுளி வாரச் சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வருவதில்லை. இதன் காரணமாக மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக வெளிமாநில வியாபாரிகள் ஜவுளி வார சந்தைக்கு அறவே வரவில்லை. இதனால் மொத்த வியாபாரம் முடங்கிப்போய் உள்ளது. தற்போது ஆன்லைனில் ஒரு சில ஆர்டர்கள் மட்டும் வந்து கொண்டிருக்கிறது. இதேபோன்று சில்லறை விற்பனையும் மிகவும் மந்தமாக நடந்து வருகிறது. இன்று 10 சதவீதம் மட்டும் சில்லறை வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். மொத்த வியாபாரம் சுத்தமாக நடைபெறவில்லை. தேர்தல் முடிந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டால்தான், ஜவுளி வாரச்சந்தை மீண்டும் பழையபடி சூடு பிடிக்க தொடங்கும் என ஜவுளி வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் கோடிக்கணக்கில் துணிகள் தேக்கம் அடைந்துள்ளதாக வேதனை தெரிவித்தனர்.