கள்ளக்குறிச்சி மாணவி மரணம்- சி.பி.சி.ஐ.டி. மனு! 

kallakurichi school student incident cbcid court

கனியாமூர் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கில், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கக் கோரி நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த ஜூலை 13- ஆம் தேதி அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் பகுதியில் 12- ஆம் வகுப்பு படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், சம்மந்தப்பட்ட பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக, 307 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், பள்ளி நிர்வாகிகள் 3 பேரும், பள்ளி ஆசிரியர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டு அனைவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினருக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் தரப்பில், விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கில் பள்ளி நிர்வாகிகள், இரண்டு ஆசிரியைகளை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மனுவை நீதிமன்றம் ஏற்றுக் கொண்ட நிலையில், இதன் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.

மாணவி உயிரிழந்த விவகாரத்தில் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன. பள்ளியும் ஒரு காரணம் என்று கூறப்பட்டு குற்றச்சாட்டு எழுந்து வரும் சூழலில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

CBCID incident kallakurichi police school student
இதையும் படியுங்கள்
Subscribe