kallakurichi school incident minister velu pressmeet today

Advertisment

கலவரம் நடைபெற்ற கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இந்த நிகழ்வின் போது, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர், மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisment

ஆய்வு பின்னர் தமிழக அமைச்சர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் எ.வ.வேலு, "வாட்ஸ் ஆப் மூலம் தவறான தகவல்களைப் பரப்பி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். நீதிக் கோரி ஜனநாயக ரீதியில் போராட அனைவருக்கும் உரிமை உள்ளது. மாணவி மரணமடைந்த மறுநாளே அமைச்சர் சி.வி.கணேசன் மாணவியின் தாயாரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். மாணவர்கள் என்ற பெயரில் பள்ளி முன் கூடிய சிலர் ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். 3,000- க்கும் மேற்பட்ட மாணவர்களின் சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்கள் எரிக்கப்பட்டுள்ளன.

நியாயம் கேட்கப் போனவர்கள் மாணவர்களின் சான்றிதழை, பேருந்துகளைக் கொளுத்தியது ஏன்? எந்த அமைப்பாக இருந்தாலும் முறையான போராட்ட அணுகுமுறையை கையாண்டிருக்கலாம். காவல்துறையின் நடவடிக்கையால் துப்பாக்கிச்சூடு ஏதுமின்றி கலவரம் கட்டுப்படுத்தப்பட்டது. அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டுமென்றே சிலர் திட்டமிட்டு கலவரத்தை நடத்தியுள்ளனர்.

கள்ளக்குறிச்சி கலவரத்தைத் தூண்டியவர் யார் என்பதைக் கண்டறிய குழு அமைக்கப்படும். கலவரத்தை முன்னின்று நடத்தியவர்கள் யார், ஈடுபட்டவர்கள் யார் என்பதை அந்த குழு கண்டறியும். கைது செய்யும் போது அரசியல் உள்நோக்கம் எதுவும் இன்றி அரசு நடவடிக்கை எடுக்கும். கலவரத்திற்கு காரணமான அனைத்து குற்றவாளிகளையும் சட்டத்தின் முன் நிறுத்துவோம். மாணவியின் குடும்பத்தினர் வந்தவுடன் மறு உடற்கூறாய்வு நாளை நடைபெறும்.

கனியாமூர் தனியார் பள்ளியில் பயின்று மாணவர்களின் கல்விக்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். 37 பள்ளி பேருந்துகள் உட்பட 67 வாகனங்கள் கலவரத்தில் சேதப்படுத்தப்பட்டுள்ளன" எனத் தெரிவித்துள்ளார்.