/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/01 art police siren_7.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மணலூர் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் கல்குவாரி பள்ளத்தில் மழை தண்ணீர் குளம் போல் தேங்கி உள்ளது. அந்த தண்ணீரில் சாக்கு மூட்டை ஒன்று மிதப்பதாக அப்பகுதியில் ஆடு மாடு மேய்க்கச் சென்றவர்கள் வட பொன்பரப்பி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதையடுத்துஇன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட கல்குவாரிக்கு விரைந்து சென்றனர். அங்கு தண்ணீரில் மிதந்த சாக்கு மூட்டையை கரைக்கு எடுத்து வந்து பிரித்துப் பார்த்தனர். அப்போது சுமார் 22 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு ரத்தக் கறையுடன் சடலமாக மூட்டைக்குள் இருந்தது தெரியவந்தது.
இதனைப் பார்த்த போலீசார் மற்றும் பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அந்த உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட இளைஞர் யார் என்பது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதே மணலூர் கிராமத்தைச் சேர்ந்த காத்தவராயன் என்பவரது மகன் தங்கதுரை (வயது 21) என்பதும் இவர் அதே கல்குவாரியில் டிராக்டர் ஓட்டும் டிரைவராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து கொலை செய்யப்பட்ட தங்கதுரையின் சகோதரி சினேகா வட பொன்பரப்பி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அவரது புகாரில் தனது அண்ணன் தங்கதுரைக்கும் குவாரியில் வேலை பார்த்து வந்த கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்தது. மேலும் சமீப நாட்களாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருந்ததாகவும் இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. எனவே தனது சகோதரர் தங்கதுரையைகவிதா தான்மற்றவர் உதவியுடன் கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி தண்ணீரில் வீசி இருக்கலாம் எனவே இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து அதே கிராமத்தைச் சேர்ந்த ரவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர்மனைவி கவிதா,தலைமறைவாக இருந்தநிலையில் அன்றைய தினமே கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், ‘தனது கணவர் ரவி வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். நான் கல்குவாரியில் வேலை செய்யும் போது எனக்கும் தங்கதுரைக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது திருமணத்தை தாண்டிய உறவாக மாறியது. இந்நிலையில் எனது கணவர் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வர இருப்பதால் இனிமேல் நமது திருமணத்தை தாண்டிய உறவு வேண்டாம்,இதுபற்றி என் கணவருக்கு தெரிந்தால் பிரச்சனை ஆகிவிடும் எனவே இனிமேல் என் வீட்டிற்கு என்னைத் தேடி வராதே என்று கவிதாதங்கதுரையைகண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே விரோதம் இருந்து வந்தது.
நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் தங்கதுரை கவிதா வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது கவிதா, "நான் தான் என் வீட்டிற்கு வராதே என்று உறவை துண்டித்து விட்டேன். இப்போது ஏன் வந்தாய்" என்று கேட்க, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தங்கதுரை கத்தியால் கவிதாவை வெட்ட முயன்றதாகவும் சுதாரித்துக் கொண்ட கவிதாவீட்டிலிருந்த கத்தியை எடுத்து தங்கதுரையின் கழுத்தில் ஆவேசத்துடன் வெட்டியதாகவும் தங்கதுரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். நள்ளிரவு ஒரு மணி வரை தங்கதுரை உடலை வீட்டிலேயே வைத்திருந்த கவிதா அதன் பிறகு சாக்கு மூட்டையில் உடலை எடுத்து வந்து கல்குவாரியில் உள்ள குட்டையில் கொண்டு வந்து போட்டதாக’ போலீசாரிடம் கூறியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us