Skip to main content

தலைவர் பதவியில் ஓராண்டு; மகிழ்ச்சியில் கிராமத்தினர்  

Published on 25/02/2023 | Edited on 25/02/2023

 

kallakurichi pudupatti panchayat president one year completed celebration 

 

தமிழகத்தில் கடந்த ஆண்டு சுமார் 9 மாவட்டங்களில் நடத்தப்படாமல் இருந்த ஊராட்சிகளுக்கான  உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.  அப்படி நடைபெற்ற மாவட்டங்களில் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து 2019ல் பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாக உதயமாகி அந்த மாவட்ட ஊராட்சிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. அதில் ஒன்று சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புதுப்பட்டி கிராம ஊராட்சி. இந்த ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சித்திர தாஸ்.

 

இவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றதை ஒட்டி அவரது ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து மக்களுக்கும் ஒருநாள் முழுவதும் காலை மதியம் இரவு என மூன்று வேளையும் சைவ, அசைவ உணவு விருந்து கொடுத்து அசத்தியுள்ளார். மேலும் புதுப்பட்டு கிராமத்திலிருந்து சங்கராபுரம் செல்வதற்கும் திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி சாலையில் உள்ள புதூர் நெடுஞ்சாலை வரை செல்வதற்கும் போக்குவரத்து வசதி மிகவும் குறைவாக இருந்தது.

 

இதை கருத்தில் கொண்டு புதுப்பட்டு ஊராட்சி கிராமத்திலிருந்து இலவச ஆட்டோ வசதியை ஏற்படுத்தி உள்ளார். இதை அந்த கிராம மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக நகரங்களுக்குச் சென்று வர பயன்படுத்திக் கொள்கிறார்கள். மக்கள் பணியில் தொய்வில்லாமல் பணி செய்து வரும் ஊராட்சி மன்றத் தலைவர் சித்திரதாசுக்கு கிராம மக்கள் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 1 கோடி பறிமுதல்; ஊராட்சித் தலைவர் மீது வழக்குப்பதிவு!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Rs. 1 crore confiscation; Case registered against panchayat chairman

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் மாவட்டம் எட்டரை ஊராட்சி மன்றத் தலைவர் திவ்யா வீட்டில் ரூ.1 கோடி நேற்று (12.04.2024) தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. கைப்பற்றப்பட்ட ரூ.1 கோடி தொடர்பாக வருமான வரித்துறை விசாரித்து வந்தனர். அதனைத் தொடர்ந்து திவ்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.1 கோடி யார் மூலம் வந்தது என தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. எட்டரை ஊராட்சி மன்றத் தலைவர் திவ்யா அதிமுகவைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. 

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.