கனியாமூர் பள்ளி கலவரம்: ஐந்து பேருக்கு ஒருநாள் காவல்

Kallakurichi- One day custody for five rioters!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் கலவரம் தொடர்பான விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், அதில் கலவரம் தொடர்பாக மக்கள் அதிகாரம் அமைப்பு, பெரியார் திராவிட கழக நிர்வாகிகள் உட்பட 300- க்கும் மேற்பட்டோர் தனிப்படை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இதில் ஐந்து பேரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கனியாமூர் பள்ளி மாணவி உயிரிழந்தது தொடர்பாக, நடைபெற்ற போராட்டத்தின் போது கலவரம் ஏற்பட்டு, பள்ளி வாகனங்கள், சொத்துக்கள் மற்றும் சம்மந்தப்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளின் சான்றிதழ்கள் எரிக்கப்பட்டன. இந்த நிலையில், வீடியோ பதிவை அடிப்படையாகக் கொண்டு, கலவரத்தில் ஈடுபட்டவர்களை தனிப்படை காவல்துறையினர் கண்டறிந்து அதிரடியாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

மற்றொருபுறம், மாணவி உயிரிழந்து தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர், பள்ளியின் தாளாளர், அவரது மனைவி மற்றும் பள்ளியின் ஆசிரியைகளை நீதிமன்றத்தின் அனுமதியுடன் காவலில் எடுத்து விசாரித்தது. அத்துடன், மற்றவர்களையும் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த ராமலிங்கம் மற்றும் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பிரபு உள்ளிட்ட ஐந்து பேரை ஒரு நாள் காவலில்எடுத்து விசாரிக்ககாவல்துறைக்கு அனுமதி வழங்கி கள்ளக்குறிச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

incident kallakurichi schools
இதையும் படியுங்கள்
Subscribe