Kallakurichi Mini Clinic Opening Ceremony Canceled ..

Advertisment

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் கிராமங்களில் 2,000 மினி க்ளினிக் துவங்குவதாகக் கூறி அறிவித்ததோடு, அதற்கான துவக்க விழாவையும் நடத்தினார். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகிலுள்ள கீழ்பாடி கிராமத்தில், மினி க்ளினிக் திறக்கப் போவதாகக் கூறி சுகாதாரத் துறையினர், வருவாய்த் துறையினர் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் அந்தக் கிராமத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த கிராம சேவை மைய கட்டடத்தை, கடந்த 20 நாட்களாகச் சுத்தம் செய்து க்ளினிக் அமைப்பதற்கான தளவாடப் பொருட்கள் மற்றும் கட்டடத்துக்கு வண்ணம் பூசுவது எனப் பல்வேறு பணிகளைச் செய்து வந்தனர்.

இந்த நிலையில், ஏற்கனவே இந்தக் கட்டடத் திறப்பு விழாவில் திமுகஎம்.எல்.ஏவசந்தன் கார்த்திகேயன் பெயர் எழுதப்பட்டிருந்தது. அந்தப் பெயரை அழித்துவிட்டு, அம்மா க்ளினிக் என்று எழுத முற்பட்டனர். இதற்கு அந்தக் கிராமத்தில் இருந்த தி.மு.கபிரமுகர்கள் எம்.எல்.ஏபெயரைஅழிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்களிடம் பேசி சரி செய்வதை விட்டுவிட்டு, அதிகாரிகள் திறப்பு விழாவை ரத்து செய்துள்ளனர். அதோடு இங்கு திறப்புவிழா செய்ய வேண்டிய மினி க்ளினிக் மொகலார் கிராமத்திற்கு இடமாற்றம் செய்வதற்கு முடிவெடுத்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த அந்தக் கிராமத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள், அங்குள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு காலை 9 மணி அளவில் ஒன்று திரண்டு முற்றுகையிட்டனர். இதனால், அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ரிஷிவந்தியம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. அதனைத் தொடர்ந்து ரிஷிவந்தியம் வட்டார மருத்துவ அலுவலர் ஜெயபால், சங்கராபுரம் துணை வட்டாட்சியர் வெங்கடேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Advertisment

அதிலும் உடன்பாடு எட்டவில்லை. இதனால், மேலும் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் தியாகதுருகம் மணலூர்பேட்டை நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்தத் தகவலை அடுத்து திருக்கோவிலூர் டி.எஸ்.பிராஜி, சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போதும் உடன்பாடு ஏற்படவில்லை. மினி க்ளினிக் எங்கள் ஊரில் திறக்கப்பட வேண்டும் அதற்கு உறுதி அளித்தால், சாலை மறியலைக் கைவிடுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

ஆனால், அதிகாரிகள் அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்ததால் பொதுமக்களின் சாலை மறியல் தொடர்ந்தது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட ஆண், பெண் உட்பட 86 பேர்கள் மீது கிராம நிர்வாக அலுவலர் குழந்தைவேலு ரிஷிவந்தியம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரை அடுத்து போலீசார் வலுக்கட்டாயமாக கீழ்பாடி கிராம மக்களைக் கைதுசெய்து குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று காவல்துறை வாகனத்தில் ஏற்றி சென்றனர்.

அவர்களை அப்பகுதியில் உள்ள சமுதாயக் கூடத்தில் அடைத்து வைத்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சமுதாயக் கூடத்தில் மாலை வரை வைத்திருந்துவிட்டு பிறகு விடுவித்தனர்.