அருகே கல்லூரி மாணவரை அடித்துக் கொலை செய்தவர்களைக் கைது செய்யக்கோரி உறவினர்கள் இறந்தவர் உடலுடன் சாலை மறியல்.

ரிஷிவந்தியம் அருகே கல்லூரி மாணவரைஅடித்துக் கொலை செய்தவர்களைக் கைது செய்யக்கோரி உறவினர்கள் இறந்தவர் உடலுடன் சாலை மறியல்.

Advertisment

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்துள்ளது ரெட்டியார்பாளையம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரது மகன் மனோஜ் (21) கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் பி.சி.ஏ. முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இவருக்கும் மரூர் காட்டுக்கொட்டாய் கிராமத்தில் வசித்து வரும் டேனியல் என்பவரது மகன் ஸ்டீபன் (27) இருவரும் பகண்டை கூட்ரோடு பகுதியில் அடிக்கடி சந்தித்து நண்பர்களாக பழகி வந்துள்ளனர். கார் டிரைவராக வேலை செய்து வருகிறார் ஸ்டீபன்.

இந்நிலையில் மனோஜ் தனது அப்பா அம்மாவிடம் தனக்கு பைக் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். அவர்கள் புதிதாக பைக் வாங்குவதற்கு பணம் அதிகம் செலவாகும். எனவே எட்டாயிரம் ரூபாய் பணத்தைக் கொடுத்து பழைய பைக் வாங்கிக் கொள்ளுமாறு கூறி உள்ளனர். மனோஜ் அந்த எட்டாயிரம் ரூபாய் பணத்தைத் தனது நண்பர் கார் டிரைவரான ஸ்டீபன் இடம் கொடுத்து அவருக்குத் தெரிந்த நண்பர்கள் மூலம் பழைய பைக் ஒன்று வாங்கித் தருமாறு கூறியுள்ளார். அந்தப் பணத்தை வாங்கிக்கொண்ட ஸ்டீபன் விரைவில் பைக் வாங்கித் தருவதாக உறுதி கூறி உள்ளார். ஸ்டீபன் எப்படியும் பைக் வாங்கிக் கொடுத்து விடுவார் என்று மனோஜ் சந்தோஷத்தில் இருந்தார்.

Advertisment

ஆனால் கடந்த இரண்டு மாதத்துக்கும் மேல் கடந்தும் ஸ்டீபன் மனோஜ்க்கு பைக் வாங்கித் தரவில்லை. மனோஜின் பெற்றோர் அவர் பைக் வாங்கித் தராவிட்டாலும் பரவாயில்லை; கொடுத்த பணத்தை வாங்கி வா என்று கூறியுள்ளனர் அதன்பிறகு மனோஜ் ஸ்டீபனை செல்ஃபோனில் தொடர்பு கொண்டு, ‘எனது பெற்றோர்கள் திட்டுகின்றனர் பைக் தராவிட்டாலும் பரவாயில்லை நான் கொடுத்த 8,000 பணத்தைத் திருப்பிக் கொடு’ என்று கேட்டுள்ளார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் ஸ்டீபன் மாடம் பூண்டி வனப் பகுதிக்கு வருமாறு மனோஜை போனில் அழைத்துள்ளார் அங்கு இருவரும் சந்தித்துள்ளனர் அந்த வனப்பகுதியில் இருவரும் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த வனக் காவலர் ஒருவர் இங்கு மது குடிக்கக்கூடாது வனக் காட்டில் கும்பலாக வந்து மது குடிப்பவர்களால் கிரிமினல் சம்பவங்களில் நடக்கின்றன. எனவே இங்கு மது குடிக்கக்கூடாது. கிளம்புங்கள் என்று என்று எச்சரித்து விட்டுச் சென்றுள்ளார்.

இதனிடையே இருவருக்கும் போதை தலைக்கேறிய நிலையில் மனோஜ் பணம் கேட்டு ஸ்டீபனிடம் தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த ஸ்டீபன், மனோஜ் கழுத்தை நெரித்தும் கல்லால் தாக்கியும் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இரவு வெகு நேரம் ஆகியும் தங்கள் மகன் வீட்டிற்கு வராததால் மனோஜின் பெற்றோர் பல இடங்களில் தேடிப் பார்த்துவிட்டுப் பகண்டை கூட்ரோடு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதுகுறித்து திருக்கோவிலூர் டி.எஸ்.பி. மகேஷ், ஆய்வாளர் செல்வம் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். சந்தேகத்தில் ஸ்டீபனை விசாரித்தனர். அப்போது ஸ்டீபன் தனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறியதுடன் காவலருடன் சேர்ந்து மனோஜ் மணம்பூண்டி வனப்பகுதியில் தேடியுள்ளார்.

காவல்துறை தேடிக்கொண்டிருந்த போது அதைப் பார்த்த வனக் காவலர், காவல்துறையினரிடம் மனோஜ் - ஸ்டீபன் இருவரும் அந்தக் காட்டில் சேர்ந்து மது அருந்திய விவரத்தைக் கூறியுள்ளார். இதையடுத்து காவல்துறையினருக்கு ஸ்டீபன் மீது சந்தேகம் அதிகரித்து, அவரைத் தனியாக அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது மனோஜை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து அவரைக் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே மனோஜ் உடற்கூராய்விற்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போது ஸ்டீபனை பொதுமக்கள் தாக்கியதில் சிறிது காயம் ஏற்பட்டதால் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து திருப்பாலபந்தல் காவல் நிலையத்திற்கு மேலும் விசாரணைக்காக அழைத்து வந்தனர்.

திங்கட்கிழமை மாலையில் பிரேதப் பரிசோதனை முடிந்து ஆம்புலன்ஸ் மூலம் மனோஜ் உடலை வீட்டுக்கு கொண்டுவந்தனர்.

நேற்று காவல்துறையினர் ஸ்டீபனைத்தடயங்களைக் காண்பதற்காக கொலை செய்த இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி தடயங்களைக் கைப்பற்றினர்.

ஆனால் குற்றவாளிகளைக் கைது செய்யவில்லை என்று கூறி ரெட்டியார்பாளையத்திலிருந்து பிரேதத்தை எடுத்துக்கொண்டு பகண்டை கூட்டு சாலையில் உள்ள நடுரோட்டில் வைத்து கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர்.

தகவலறிந்த திருக்கோவிலூர் டி.எஸ்.பி. மகேஷ் தலைமையில் ஏராளமான போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளியை இரவே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறோம் என்று கூறியதின் பேரில் சாலை மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.இதனால் அப்பகுதிசிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.