/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/judgement-art_71.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கடந்த ஆண்டு (2024) ஜூன் மாதம் விஷச்சாராயம் அருந்திய சுமார் 69 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியது. இது தொடர்பாக அரசியல் கட்சிகள் கண்டனங்கள் தெரிவித்த நிலையில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட பலரை போலீசார் கைது செய்திருந்தனர். விஷச்சாராய விற்பனை மற்றும் கடத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் மொத்தம் 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் கள்ளச்சாராய வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்த வழக்கு தற்பொழுது சி.பி.ஐ. விசாரணையில் இருக்கும் நிலையில் வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் கோவிந்தராஜ் என்கிற கண்ணுக்குட்டி, கண்ணுக்குட்டியின் மனைவி விஜயா, கண்ணுகுட்டியின் சகோதரர் தாமோதரன், பரமசிவம் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கண்ணுக்குட்டி, தாமோதரன் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று (22.04.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. தரப்பில் வாதிடுகையில், “இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் கன்றுக்குட்டிக்கும், தாமோதரனுக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது” எனக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் நீதிமன்றம் கண்ணுக்குட்டி, தாமோதரன் ஆகிய இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் மறு உத்தரவு வரும் வரை இருவரும் விசாரணை அதிகாரி முன் தினமும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)