Kallakurichi liquor Case 4 people in police custody

Advertisment

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கடந்த ஆண்டு (2024) ஜூன் மாதம் விஷச்சாராயம் அருந்திய சுமார் 67 பேர் உயிரிழந்ததானர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியது. இது தொடர்பாக அரசியல் கட்சிகள் கண்டனங்கள் தெரிவித்த நிலையில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட பலரை போலீசார் கைது செய்திருந்தனர். விஷச்சாராய விற்பனை மற்றும் கடத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் படி மொத்தம் 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் கள்ளச்சாராய வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்த வழக்கு தற்பொழுது சி.பி.ஐ. விசாரணையில் இருக்கும் நிலையில் வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் தாமோதரன் என்கிற கண்ணுக்குட்டி, கண்ணுகுட்டியின் மனைவி விஜயா, கண்ணுகுட்டியின் சகோதரர் கோவிந்தராஜ், பரமசிவம் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இந்த 4 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கை இன்று (04.03.2025) விசாரித்த நீதிபதி ஹரிஹரன், கண்ணுக்குட்டி, விஜயா, கோவிந்தராஜ், பரமசிவம் ஆகிய 4 பேரையும் வரும் 8ஆம் தேதி (08.03.2025) வரை என 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளார்.