
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே இருக்கும் பொ.மெய்யூர் எனும் ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் கவியரசன் மற்றும் அசோக், இருவரும் லாரி ஓட்டுநர்கள். இவர்கள் இருவரும் நண்பர்களும்கூட. இவர்கள் நேற்று முன்தினம் திடீரென அவசர போலீஸ் 100 என்ற எண்ணுக்கு ஃபோன் செய்துள்ளனர். ஃபோன் செய்து, "எங்களுக்குச் சொந்தமான ஒரு லாரியை நாங்கள் ஓட்டி வரும் போது வழிமறித்த சிலர், எங்களைத் தாக்கிவிட்டு லாரியை கடத்திச் சென்றுவிட்டனர். மேலும், கடத்தல்காரர்கள் ஒரு லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் லாரியை விடுவிப்பதாக பேரம் பேசுகின்றனர். அந்த கடத்தல்காரர்களை மடக்கி பிடித்து எங்கள் லாரியை அவர்களிடமிருந்து மீட்டுத் தர வேண்டும்" என்று கூறியுள்ளனர்.
இந்த தகவலை அவசர போலீஸார் திருக்கோவிலூர் காவல் நிலையத்திற்குத் தெரிவித்துள்ளனர். திருக்கோவிலூர் போலீஸார் பதறியடித்துக்கொண்டு இளைஞர்கள் ஃபோன் செய்த ஊருக்குச் சென்றனர். அவசர போலீஸ் 100க்கு ஃபோன் செய்த சம்பந்தப்பட்ட லாரி டிரைவர்கள் கவியரசன், அசோக் ஆகியோரிடம் நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது, அங்கிருந்த அக்கம்பக்கத்தினரிடமும் விசாரணை செய்ததில் கவியரசன், அசோக் கூறியபடி அவர்கள் லாரியை யாரும் கடத்தவும் இல்லை; அதை விடுவிக்கப் பணமும் கேட்கவில்லை எனத் தெரியவந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, அப்பகுதி மக்களிடையே விசாரணையைத் தீவிரப்படுத்திய காவல்துறையினர், கவியரசன், அசோக் இருவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்களுக்கும் முன்விரோதம் இருந்ததைக் கண்டறிந்துள்ளனர். முன்விரோதம் காரணமாக அந்த இளைஞர்களை பழிவாங்க வேண்டும் என்று, அவர்களை போலீஸில் சிக்க வைத்து சிறைக்கு அனுப்பும் நோக்கத்தோடு அவசர போலீஸ் 100க்கு இருவரும் பொய் தகவலை பரபரப்பாகத் தெரிவித்துள்ளனர் என்பது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து பொய்யான காரணத்தைக் கூறி போலீஸாருக்கு தொந்தரவு கொடுத்தது, மற்றவர்களைப் பழிவாங்க வேண்டுமென்று பொய் புகார் அளித்தது உள்ளிட்டவைகளைக்கொண்டு அவர்கள் இருவர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.