kallakurichi district collector personal assistant incident police investigation

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் ஆட்சியராக கிரன் குராலா பணியாற்றி வருகிறார். இவருடைய நேர்முக உதவியாளராக சிவபாலன் (வயது 40) பணியாற்றி வந்தார். இவருக்கு லலிதா என்ற மனைவியும், அருளானந்தம் என்ற 18 வயது மகனும் உள்ளனர். இவர்களது மகன் சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு பொறியியல் கல்லூரியில் சேருவதற்கான தேர்வு சம்பந்தமாகப் படித்து வருகிறார். இவருக்கு துணையாக சிவபாலன் மனைவி லலிதா சென்னையில் தங்கியுள்ளார்.

Advertisment

இந்த நிலையில் நேற்று முன்தினம் (07/04/2021) காலை சென்னையில் இருந்தபடி தனது கணவர் சிவபாலனுக்கு அவரது மனைவி லலிதா ஃபோன் செய்துள்ளார். நீண்ட நேரம் ஆகியும் ஃபோன் எடுக்கவில்லை. இதையடுத்து, சிவபாலனின் நண்பர் பூபதி என்பவருக்கு தொடர்பு கொண்டு எனது கணவருக்கு பலமுறை ஃபோன் செய்தும் எடுக்கவில்லை. அது சம்பந்தமாக நேரில் எங்கள் வீட்டுக்குச் சென்று விசாரித்து பதில் கூறுமாறு தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து பூபதி, சிவபாலன் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது கதவு மட்டும் திறந்து இருந்த நிலையில், வீட்டிற்குள் சிவபாலன் மின்விசிறியில் தூக்கில் தொங்கியது தெரிய வந்துள்ளது.

Advertisment

அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிவபாலனின் நண்பர் பூபதி லலிதாவுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக, உடனடியாக காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சிவபாலனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனைக்குப் பின் சிவபாலனின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சிவபாலன் ஏன் தற்கொலை செய்து கொண்டார்? என்ன காரணம்? என்பது குறித்து கள்ளக்குறிச்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறன்றனர்.

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.