Skip to main content

காதல் திருமணம் செய்த அதிமுக எம்.எல்.ஏ...

Published on 05/10/2020 | Edited on 05/10/2020

 

ADMK Prabhu MLA

 

 

கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்.எல்.ஏவாக இருப்பவர் பிரபு. இவரது சொந்த ஊர் தியாகதுருகம். இவரது பெற்றோர்கள் தந்தை ஐயப்பா, தாய் தைலம்மை. இதில் பிரபுவின் தந்தை ஐயப்பா தியாகதுருகம் ஒன்றிய அதிமுக செயலாளராக சுமார் பத்தாண்டுகளாக பதவியில் உள்ளார். பிரபு எம்.எல்.ஏ-வும் அவரது தந்தையும்  தொகுதியிலுள்ள  கட்சிக்காரர்களிடத்திலும் பொதுமக்களிடத்திலும்  செல்வாக்கு பெற்றவர்கள்.  

 

மேலும்  ஐயப்பா தனது சொந்த உழைப்பின் மூலம் பொருளாதார ரீதியில் மிகப்பெரிய செல்வந்தராகவும் உள்ளார். சுமார் 35 வயது உள்ள எம்.எல்.ஏ. பிரபுவுக்கு நீண்ட நாட்களாக மணப்பெண் தேடிக் கொண்டிருந்தனர். 

 

இந்தநிலையில் தியாகதுருகத்தில் உள்ள மலையம்மன் கோயில் அர்ச்சகராக உள்ள சாமிநாதனின் மகள் கல்லூரியில் படித்து வரும் சௌந்தர்யாவுக்கும் பிரபுவுக்கும் காதல் இருந்து வந்துள்ளது. இருவருக்கும் ஏற்பட்ட காதலை சௌந்தர்யாவின் தந்தை சாமிநாதன் ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம் இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதுதான். இதனால் பெண்ணின் தந்தை இவர்கள் திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தும் சௌந்தர்யாவின் முழு சம்மதத்துடன் சௌந்தர்யாவின் உறவினர்கள் எம்.எல்.ஏ. பிரபுவின் உறவினர்கள்  மட்டும் கலந்துகொள்ள எளிமையான முறையில் பிரபு சௌந்தர்யா திருமணம் பிரபுவின் வீட்டில் இன்று அதிகாலை நடைபெற்றது. 

 

சௌந்தர்யாவின் தந்தை சாமிநாதன் அவர்களிடம் சமாதானம் பேசி உள்ளனர். இதற்குள் மணமகளை பிரபு எம்.எல்.ஏ. கடத்தி சென்றுவிட்டதாக பரபரப்பு செய்தி பரவியது. பொதுவாக காதல் திருமணம் செய்வது சாதாரண எளிய மனிதர்கள் முதல் மிகப்பெரிய வி.ஐ.பி வரை நடப்பதுதான். இதில் பிரபு எம்.எல்.ஏ.வின் காதல் திருமணத்தை பரபரப்பாக்கி, பெரிதுபடுத்துவது ஏன்? அரசியல்வாதி என்றால் காதலிக்கக்கூடாதா, காதலித்து திருமணம் செய்து கொள்ளக்கூடாதா? என்று கேள்வி எழுப்புகிறார்கள் எம்.எல்.ஏ பிரபுவின் ஆதரவாளர்கள். மணமகள் சௌந்தர்யாவின் முழு சம்மதத்தின் பேரில் நடைபெற்றுள்ள இந்த சாதி மறுப்பு திருமணத்தை பல்வேறு தரப்பினரும் வரவேற்று வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்