Kalimedu accident ..

Advertisment

தஞ்சை மாவட்டம், களிமேடு பகுதியில் அப்பர் தேர் ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கு 11 பேர் உயிரிழந்தனர். மேலும், 15 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், வி.சி.க நிறுவனர் தொல். திருமாவளவன் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தஞ்சாவூர் அருகே களிமேடு என்னுமிடத்தில் நடந்துள்ள மின் விபத்தில் 11 பேர் பலியாகியிருப்பது பெருந்துயரமளிக்கிறது. மேலும் 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர் என்பதும் மிகுந்த வேதனையளிக்கிறது. அப்பர் என்னும் திருநாவுக்கரசரின் சதயத் திருவிழாவையொட்டி நடந்த தேரோட்டத்தின் போது, தேரின் உச்சிப்பகுதி உயர் அழுத்த மின்கம்பியில் உரசியதால் திடுமென தீப்பிடித்து இந்தக் கோர விபத்து நடந்துள்ளதாகத் தெரியவருகிறது. இது நெஞ்சை உறையவைக்கும் கொடூரமாக உள்ளது. இவ்விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினர் யாவருக்கும் விசிக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உயிருக்குப் போராடும் பிற நால்வருக்கும் அதி உயர் சிகிச்சையளித்திட அரசு ஆவணசெய்ய வேண்டுகிறேன். அத்துடன், காயமடைந்த பிற யாவரும் விரைந்து நலம்பெற உரிய மருத்துவமளிக்க வேண்டுகிறேன். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டுமெனவும் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

Advertisment

அத்துடன், இது போன்ற விழாக்களில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கூடுவது வாடிக்கை என்கிறபோது, இத்தகைய விபத்துகள் நடக்கலாமென்னும் நிலையில் பேரிடர் மேலாண்மைக் குழுவினரைத் தயார்நிலையில் வைத்திருப்பது இன்றியமையாததாகும். இனிவரும் காலங்களில் இதுபோன்ற பெருந்திரள் கூடும் விழாக்களில் விபத்துத் தடுப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமாறு தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.