பாலியல் புகார்; காளிகாம்பாள் கோவில் அர்ச்சகர் கைது!

Kalikampal temple priest arrested

சினிமா மோகத்தில் கோவையிலிருந்து சென்னை வந்த பெண் ஒருவர் கோவில் அர்ச்சகரிடம் பழகி வந்த நிலையில் தீர்த்தத்தைக் கொடுத்து மயக்கம் அடையச் செய்து பெண்ணை அர்ச்சகர் பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பிரபல கோவில் அர்ச்சகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொறியியல்படித்த கோவையைச் சேர்ந்த பெண் ஒருவர் சினிமா மோகத்தில் சென்னை வந்துள்ளார். பெற்றோரை இழந்த அப்பெண் உறவினர்களிடத்தில் வளர்ந்து வந்த நிலையில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள காந்திநகரில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து சினிமா வாய்ப்புகளைத் தேடி வந்துள்ளார். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதேபோல் சில திரைப்படங்களிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். அப்பெண்ணுக்கு கடவுள் பக்தி அதிகம் என்பதால் பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்கு சென்று வழிபடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அப்பொழுது காளிகாம்பாள் கோவில் குருக்களாக இருந்த கார்த்திக் முனுசாமி என்பவர் பெண்ணுக்கு அறிமுகமாகியுள்ளார். பிறகு இருவரும் அடிக்கடி பேசிப் பழகி உள்ளனர். கார்த்திக் பென்ஸ் கார் ஒன்று வைத்திருந்த நிலையில் அந்தக் காரில் அவரை ஏற்றிக்கொண்டு வீட்டில் விடுவதாக அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் வீட்டுக்குச் சென்று அந்தப் பெண்ணிடம் தீர்த்தம் என எதையோ குடிக்க கொடுக்க, அவரும் குடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் மயக்கம் அடைந்த நிலையில் அப்பெண்ணை அர்ச்சகர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

தான் பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்யப்பட்டது அறிந்து அப்பெண் அர்ச்சகரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் பயந்த அவர் அப் பெண்ணை திருமணம் செய்து கொண்டு யாருக்கும் தெரியாமல் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக்கின் செல்போனை அப்பெண் ஆய்வு செய்தபோது பல பெண்களின் ஆபாசப் புகைப்படங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ந்து போனார். தன்னுடைய படங்களையும் அர்ச்சகர் கார்த்திக் பல நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளது மேலும் அப்பெண்ணுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் உடனடியாக காவல்துறையில் புகார் கொடுத்திருந்தார். இதுகுறித்து விருகம்பாக்கம் காவல்துறையினர் அர்ச்சகர் கார்த்திக் மீது ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணிடமும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்றது. கொலை மிரட்டல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், நம்பிக்கை மோசடி, பெண்ணை மானபங்கம் செய்தல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். குற்றச்சாட்டின் பேரில் ஏற்கனவே கார்த்திக் முனுசாமிக்கு சம்மன் கொடுத்து வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தி இருந்த நிலையில் தற்போது விருகம்பாக்கம் மகளிர் போலீசார் தற்போது கார்த்திக் முனுசாமியை கைது செய்துள்ளனர்.

Chennai police
இதையும் படியுங்கள்
Subscribe