Advertisment

“ரயில்வே பணி நியமனத்தில் சாதிவாரி கொள்கைக்கு எதிரான விதிகள் கூடாது” - கலாநிதி வீராசாமி வலியுறுத்தல்

Kalanidhi Veerasamy insists rules against caste-based policy in railway recruitment

ரயில்வே பணிகளுக்கான தேர்வு வாரியத்தில் அரசின் சாதிவாரி இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக புதிய விதி சேர்த்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து மக்களவையில் கேள்வி எழுப்பிய வட சென்னை தொகுதி திமுக எம்.பி கலாநிதி வீராசாமி, புதிய விதியை வாபஸ் பெற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தினார்.

Advertisment

இது தொடர்பாக மக்களவையில் பேசிய எம்.பி. கலாநிதி வீராசாமி, “சமீபத்தில் ரயில்வே தேர்வு வாரிய அதிகாரிகள் அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக ஒரு விதியை அறிவித்துள்ளனர். இது அரசியல் சட்டம் வகுத்துள்ள இட ஒதுக்கீட்டுக் கொள்கையை தகர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த புதிய விதியின்படி, பட்டியல் இனத்தவரும், பட்டியல் மலைவாழ் மக்களும், ஓ.பி.சி எனப்படும் பிற்படுத்தப்பட்டவர்களும் பாதிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு ரயில்வே துறையின் பணியாளர்கள் தேர்வின்போது பெரிய சிக்கல் ஏற்படுகிறது.

Advertisment

இந்த சமூகத்தினரால் பொதுபட்டியல் மற்றும் யாருக்கும் ஒதுக்கப்படாத பணி இடங்களுக்கான பட்டியலின் கீழ் சேர்க்கப்பட்டுள்ள பணியிடங்களுக்குப் போட்டியிட இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த பொதுத் தேர்தலுக்கு முன் கூட இத்தகைய புது விதியை, ரயில்வே தேர்வு வாரிய அதிகாரிகள் கொண்டுவர முயற்சி செய்தனர். அப்போது, இது குறித்து அன்றைய ரயில்வே துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று முறையிடப்பட்டது. இதனால் இந்த புதிய விதி திரும்பப் பெறப்பட்டது. தற்போது, அந்த நிலை மாறி, புதிய அரசு அமைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விதியை மீண்டும் அமல்படுத்த ரயில்வே தேர்வு வாரிய அதிகாரிகள் முயற்சிக்கின்றனர்.

எனவே, இதனை நான் மீண்டும் தற்போதைய ரயில்வே அமைச்சர் அவர்களின் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். இவ்விதியை திரும்பப் பெற தக்க ஆணை வெளியிடக் கோருகிறேன். ரயில்வே தேர்வு வாரியம் கொண்டு வர முயற்சிக்கும் இந்த விதியின் படி, இரண்டாம் நிலை கம்ப்யூட்டர் தேர்வுக்கு இட ஒதுக்கீடு கொள்கையின் படி, பட்டியல் பிரிவு, பட்டியல் மலைவாழ் மக்கள் பிரிவு, மற்றும் ஓ.பி.சி பிரிவின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள், அடுத்த கட்ட தேர்வுகளுக்கு அந்தந்த பிரிவிலுள்ள காலி இடங்களுக்கான பணியிடங்களுக்கு மட்டுமே போட்டியிட முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

இதனால், பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர்கள், பொது பட்டியலில் வெளியிடப்பட்டுள்ள பணி இடங்களுக்கு போட்டியிடாத இயலாத நிலை உண்டாகிறது. எனவே, சட்ட விதியை திரும்ப பெறுவதுடன் இந்த விதியை புகுத்த விரும்பும் ரயில்வே தேர்வு வாரிய அதிகாரிகளின் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று பேசினார்.

Parliament
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe