ADVERTISEMENT

திறக்கப்பட்டது கலைஞர் கோட்டம்; முதல்வர் திறந்து வைத்தார்

04:03 PM Jun 20, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருவாரூரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞரின் 100வது பிறந்தநாளை திமுகவினர் இந்த வருடம் முழுக்க கொண்டாடி வருகின்றனர். கலைஞரின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று 20ம் தேதி திருவாரூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. திறப்பு விழா நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்பார் என்றும் கலைஞர் கோட்டத்தை பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் திறந்து வைப்பதாகவும் கூறப்பட்டது.

திருவாரூர் அடுத்த காட்டூரில் 7 ஆயிரம் சதுர அடியில் ரூ. 12 கோடி மதிப்பில் சென்னை தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. இந்த கோட்டத்தில் 2 திருமண மண்டபங்கள், முத்துவேலர் நூலகம் மற்றும் கலைஞரின் முழு உருவச் சிலை போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. மிக பிரம்மாண்டமாக திருவாரூர் தேர் போன்ற வடிவமைப்பில் இந்த கோட்டம் கட்டப்பட்டுள்ளது. இந்த கலைஞர் கோட்டத்தை 20ம் தேதியான் இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் திறந்து வைக்க இருப்பதாகவும், முத்துவேலர் நூலகத்தை பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி திறந்து வைப்பதாகவும் கூறப்பட்டது.

திடீரென பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமாரின் தமிழ்நாட்டு பயணம் ரத்து செய்யப்பட்டது. உடல்நிலை சரியில்லாததன் காரணமாக பீகார் முதலமைச்சரின் திருவாரூர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி மட்டும் நிகழ்வில் கலந்துகொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்தார். முன்னதாக நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு ஹெலிகாப்டரில் வந்த பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வியை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று வரவேற்றார். அவருக்கு கலைஞர் குறித்த புத்தகம் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT