Kalaimamani awardee receives rs.1 lakh after Nakkheeran news echoes

அரசின் கலைமாமணி விருது பெற்று நலிந்த நிலையில் வாழும் தூத்துக்குடி மாவட்டம் மேலக்கரந்தை பி. சீதாலட்சுமி, நெல்லை சுந்தர்ராஜன், மதுரை ஜி.எஸ். மணி, ஆச்சாள்புரம் சின்னத்தம்பி, ஆக்காட்டி ஆறுமுகம், உள்ளிட்ட 10 கலைஞர்களுக்கு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் பொற்கிழி தொகையாக தலா ரூபாய் 1 லட்சம் நிதியுதவி 2025 பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து பிப்ரவரி 26 ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கலைமாமணி விருதாளர்கள் 6 பேருக்கு பொற்கிழிக்கான காசோலைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விழா அரங்கில் வழங்கினார். அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்த 10 கலைமாமணி விருதாளர்களில் ஒருவரான வல்லிசை கலைஞர் தூத்துக்குடி மாவட்டம் மேலக்கரந்தை பி. சீதாலட்சுமிக்கு, மூன்று மாதங்களை கடந்தும் தற்போது வரை பொற்கிழிக்கான தொகை ரூபாய் 1 லட்சம் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்தது.

Advertisment

இது குறித்து இயல் இசை நாடக மன்ற நிர்வாகிகளை தொடர்பு கொண்டு கேட்டால் டிசைன் டிசைனாக பதில் சொல்கிறார்கள். இது நலிந்த நிலையில் உள்ள தன்னை மிகவும் வேதனைப்படுத்தி உள்ளதாகவும், அறிவிக்கப்பட்ட பொற்கிழி தொகை ரூபாய் 1 லட்சத்தை நல்ல முறையில் தருவதற்கு இயல் இசை நாடக மன்ற நிர்வாகிகள் உதவி செய்ய வேண்டுமென வல்லிசை கலைஞர் சீதாலட்சுமி கோரிக்கை விடுத்த செய்தி நக்கீரனில் கடந்த 9ஆம் தேதி விரிவாக வெளியாகி இருந்தது.

Kalaimamani awardee receives rs.1 lakh after Nakkheeran news echoes

நக்கீரனில் வெளியான செய்தி தொடர்பாக தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அலுவலகத்தில் இருந்து நமது நிருபரை தொடர்பு கொண்ட அதிகாரிகள் வில்லிசை கலைஞர் சீதாலட்சுமியின் நிலைமை கேட்டறிந்தனர். அதன்பிறகுஅமைச்சர் அலுவலகம் விரைவான நடவடிக்கையில் இறங்கியது. தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கலைமாமணி விருதாளர் பி. சீதாலட்சுமியை மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசி விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து விசாரணை நடத்தி பொற்கிழி தொகையை உடனடியாக ஒப்படைக்க உத்தரவிட்டார். அமைச்சர் மு.பெ. சாமிநாதனின் அதிரடி நடவடிக்கையை தொடர்ந்து, கலைமாமணி விருதாளர் சீதா லட்சுமிக்கு கிடைக்க வேண்டிய பொற்கிழி தொகையான ரூபாய் 1 லட்சத்தை உடனடியாக அவரது வங்கி கணக்கில் மின்னணு பணப்பரிவர்த்தனை மூலம் அதிகாரிகள் வரவு வைத்தனர். பணம் வரவு வைக்கப்பட்ட தகவலை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், கலைமாமணி விருதாளர் சீதாலட்சுமியை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.

Advertisment

தன்னுடைய கோரிக்கையை கருணை உள்ளத்துடன் கேட்டுப் பரிசீலித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு மூன்றே நாளில் பணம் கிடைக்கச் செய்த அமைச்சர் மு.பெ. சாமிநாதனுக்கும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், அரசின் கவனத்துக்கு கொண்டு சென்ற நக்கீரன் ஊடகத்துக்கும் கலைமாமணி விருதாளர் சீதாலட்சுமி மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார்.

செய்தியாளர் - எஸ்.மூர்த்தி