
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நினைவிடம் அருகே கடலுக்குள் உயரமான பேனா சிலை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டு கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்திய போது சீமான் உள்பட பலரும், ‘கடல் வளம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கும். அதனால் கடலுக்குள் பேனா சிலை வைக்க கூடாது’ என்று எதிர்ப்பு தெரிவித்தனர். சீமான், “சிலை வைக்கக் கூடாது என்று போராடுவேன். மீறி பேனா சிலை வைத்தால் உடைப்பேன்” என்றார். இதன் பிறகு தொடர்ந்து பொதுமக்களிடம் பேனா பேசுபொருளாகி உள்ளது.
இந்த நிலையில், புதுக்கோட்டை நகரில் (கே.கே.சி) அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி எதிரில் உள்ள 5 ஏக்கர் காலி இடத்தில் பூங்கா அமைக்க கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அறிவிப்பு வெளியாகி பணிகள் தொடங்கியது. சுமார் ரூ. 900.25 லட்சம் மதிப்பீட்டில் சிறுவர்கள், பெரியவர்களுக்கான பூங்கா, உடற்பயிற்சி கூடம், கணிதம், அறிவியல் உபகரணங்கள், காய்கறி, பழங்கள், இசை நீரூற்று, காங்கிரீட் மரங்கள், விலங்குகள், பறவைகள் என நூற்றுக்கணக்கான அம்சங்களுடன் பூங்கா தயாராகி வருகிறது. வரும் மார்ச் மாதத்தில் பூங்கா திறப்பு விழா காண உள்ள நிலையில், சில நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பணிகளை ஆய்வு செய்தார்.

தற்போது அந்த அதிநவீன பூங்காவில் காங்கிரீட் பேனா சிலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பேனா சிலை கட்டுமானப் பணிகள் நடப்பது பற்றி அறிந்த ஏராளமானவர்கள் தினசரி வந்து பார்த்துச் செல்கின்றனர். இதே புதுக்கோட்டை நகரில் காந்தி பூங்கா உள்பட பல பூங்காக்கள் சரியான பராமரிப்பு இல்லாமல் தனியார் ஒப்பந்தக்காரர்கள் கையில் சிக்கி வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இப்போது 9 கோடியில் அமைக்கப்படும் பூங்காவை யார் கைப்பற்றி மக்கள் பணத்தை பறிக்கப் போகிறார்களோ என்கின்றனர் விபரமறிந்த பலரும்.