Skip to main content

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்; 1.48 கோடி விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பு

Published on 10/08/2023 | Edited on 10/08/2023

 

kalaignar Women Rights Project 1.48 crore applications submitted

 

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்தத் திட்டத்தின் மூலம் குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டம் செயல்படுத்துவது குறித்து  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்களுடனான கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், "மகளிர் உரிமைத் திட்டத்திற்கு 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்' எனப் பெயர் சூட்டுவது பொருத்தமாக இருக்கும்” எனத் தெரிவித்திருந்தார்.

 

அதனைத் தொடர்ந்து இந்தத் திட்டத்திற்குத் தகுதியான பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கும் வகையில் முதற்கட்ட விண்ணப்ப விநியோகம் செய்யப்பட்டது. இதையடுத்துப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைப் பதிவு செய்யும் முகாமைத் தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை 24 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான முதற்கட்ட விண்ணப்பங்களை ரேசன் கடைகள் மூலம் பதிவு செய்யும் முகாம் நடைபெற்று நிறைவடைந்திருந்தது. முதற்கட்டமாக 20 ஆயிரத்து 765 நியாய விலைக் கடைகளில் இருக்கும் குடும்ப அட்டைகளுக்கு ஜூலை 24 ஆம் தேதி முதல் கடந்த 4 ஆம் தேதி வரை நடைபெற்ற விண்ணப்பப் பதிவு முகாமில் 88 லட்சத்து 34 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

 

இதன் தொடர்ச்சியாக இரண்டாம் கட்ட முகாம்கள் கடந்த 5 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த இரண்டாம் கட்ட முகாமில் இதுவரை 59 லட்சத்து 86  ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.  அந்த வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் இதுவரை 1 கோடியே 48 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் இந்த முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் அளிக்கப்பட்ட தகவல்களைச் சரிபார்க்க கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த இரண்டு முகாம்களிலும் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் ஆகஸ்ட் 19 மற்றும் 20 ஆகிய இரு நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்குமாறும் தமிழக அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்