kalaignar Women Entitlement Scheme Application distribution has started in Chennai

மகளிர் உரிமைத் தொகை திட்டம் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டம் செயல்படுத்துவது குறித்து சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்களுடனான கூட்டம் நடைபெற்றது. அப்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்' எனப் பெயர் சூட்டுவது பொருத்தமாக இருக்கும். வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது எனத் தெரிவித்திருந்தார்.

Advertisment

மேலும் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்குதல், அரசாணை வெளியிடுதல், சிறப்பு அதிகாரிகள் நியமித்தல் என பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தைச் செயல்படுத்துவது மற்றும் இந்த திட்டத்திற்கு டோக்கன் வழங்குவது, விண்ணப்பம் விநியோகம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்திப்ராய் ரத்தோர், சென்னை மாவட்ட ஆட்சியர் அருணா உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

Advertisment

அப்போது அவர் இதுகுறித்து தெரிவிக்கையில், “கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்திற்கான விண்ணப்பம் ரேசன் கடைகள் மூலமாக ஜூலை 20 ஆம் தேதி முதல் நேரடியாக விண்ணப்பதார்களின் வீடுகளுக்கு டோக்கன் மற்றும் விண்ணப்பம் விநியோகம் செய்யப்படும். இந்த திட்டத்திற்கானவிண்ணப்பம் விநியோகம், டோக்கன் விநியோகம் தொடர்பான விபரங்கள் ரேசன் கடைகள் முன்பாக அறிவிப்பு பலகை வைக்கப்படும். பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட டோக்கனில் குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்திற்கு பொதுமக்கள் ரேசன் கடைகளுக்கு வருகை தந்தால் போதுமானது. இந்த திட்டத்திற்காக குடும்ப அட்டை, ஆதார் அட்டை, மின் இணைப்பு அட்டை, வங்கி கணக்கு விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. பயனாளிகள் சேர்ப்பு தொடர்பாக சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளது. வங்கிக்கணக்கு இல்லாதவர்களுக்குச் சிறப்பு முகாம்களிலேயே வங்கிக்கணக்கு ஏற்படுத்தி தரப்படும். பொதுமக்களுக்கு உதவ 500 கார்டு எண்ணிக்கைக்கு ஒரு தன்னார்வ அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் இன்று காலை முதல் சென்னை மாநகராட்சி சார்பில் முதல் கட்டமாக இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்கள், டோக்கன் ஆகியவை பயனாளிகளின் வீடுகளுக்குச் சென்று வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கான விரிவான ஏற்பாடுகள் மாநகராட்சி சார்பில் செய்யப்பட்டுள்ளன.