The kalaignar who started the IT revolution of Tamil Nadu Chief Minister M.K.Stalin

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (15.07.2023) காணொலிக் காட்சி வழியாக மதுரை எல்கோசெஸ்ஸில் அமைந்துள்ள பின்னக்கிள் இன்பொடெக் சொலுயுசன்ஸின் தகவல் தொழில்நுட்ப கட்டடத்தை திறந்து வைத்தார்.

Advertisment

அதனைத்தொடர்ந்து அவர் பேசுகையில், “பின்னக்கிள் நிறுவனத்தின் மிகப்பெரிய குளோபல் என்ஜினியரிங் செண்டர் ஆப் எக்சலன்ஸைமதுரைவடபழஞ்சியில் திறந்து வைப்பதில் பெருமையடைகிறேன். மதுரை சிறப்பு பொருளாதார மண்டலம், வடபழஞ்சியில் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் 245.17 ஏக்கர் பரப்பளவில் தகவல் தொழில்நுட்பப் பூங்காவை அமைத்துள்ளது. இதில் 120 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 1,80,000 சதுர அடி பரப்பளவில் 950 பணியாளர்களுக்கு பணிவாய்ப்பினை அளித்து, உலகத்தரம் வாய்ந்த தகவல் தொழில்நுட்ப மையத்தை பின்னக்கிள் நிறுவனம் அமைத்துள்ளது.

Advertisment

இது இந்தியாவில் அமையும் நான்காவது குளோபல் டெலிவரி சென்டர் ஆகும். தனித்துவம் வாய்ந்த சிறப்பம்சங்களைக் கொண்ட இந்த பின்னக்கிள் நிறுவனத்தின் மையம் மூலமாக 6,000 பேருக்கு, குறிப்பாக தென்மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க இருப்பது எனக்கு மேலும் மகிழ்ச்சி அளிக்கிறது. திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற பின், பொருளாதாரத்தை வளர்க்கவும், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரவும், தொழில்துறையில் அதிக அக்கறையும்கவனமும் செலுத்தி வருவதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

நம்முடைய இலக்கு என்பது தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சியை பெருக்கி, அனைத்து மாவட்டங்களும் அனைத்து வளர்ச்சியையும் அடைந்தது என்ற நிலையை எட்டுவது தான். எங்களுடைய இந்த இலக்கை அடைய உதவிடும் வகையில் பின்னக்கிள் போன்ற நிறுவனங்கள் இன்னும் பிற தென் மாவட்டங்களில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை என்னுடைய வேண்டுகோளாக இந்த தருணத்தில் வைக்கிறேன்.

ஐடி என்றாலே கலைஞர் தான். அந்த அளவுக்கு தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ச்சிக்காக எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றிக் காட்டியவர் முத்தமிழறிஞர் கலைஞர். இந்தியாவிலேயே முதன்முதலாக 1997-ஆம் ஆண்டே தகவல் தொழில்நுட்ப கொள்கையை உருவாக்கி தமிழ்நாட்டின் ஐடி புரட்சிக்கு வித்திட்டவர் தலைவர் கலைஞர்.

சென்னையில் டைடல் பூங்காவை அமைத்து இன்று ராஜீவ் காந்தி சாலை என அழைக்கப்படும் ஓஎம்ஆர் சாலைதகவல் தொழில்நுட்ப தாழ்வாரமாக வழிவகுத்தார். எதிர்காலம் என்பது டிஜிட்டல் காலம் என்பதை முன்கூட்டியே உணர்ந்து, தமிழ்நாட்டிலுள்ள மாணவர்கள் கணினி பயில்வதை ஊக்குவித்தார். அவர்கள் மென்பொருள் துறையில் சிறந்து விளங்குவதற்கு காரணமானார். இன்று தமிழ்நாட்டில் வீதிதோறும் பொறியியல் பட்டதாரிகள் இருக்கிறார்கள் என்றால் அதற்கு அடித்தளமிட்டவர்தான் நவீன தமிழ்நாட்டின் சிற்பியான கலைஞர். அத்தகைய தலைவர் கலைஞர் நூற்றாண்டில் மதுரையில் அமையும் இந்த பின்னக்கிள் நிறுவன மையம் தென் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறேன்” என தெரிவித்தார்.