Skip to main content

“கல்வியை அனைத்து தரப்புக்கும் சென்றடையச் செய்தவர் கலைஞர்” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Published on 06/10/2023 | Edited on 06/10/2023

 

kalaignar who made education accessible to all says Minister Udayanidhi Stalin

 

சென்னை கோட்டூர்புரத்திலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்று பல்வேறு நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுள்ள 1,200 மாணவ, மாணவியருக்குப் பணி நியமன ஆணைகளை இன்று (06.10.2023) வழங்கினார்.

 

அதனைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே என்றிருந்த, கல்வியை அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் சென்றடைய செய்தவர் கலைஞர். கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. நம் மாநில மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று படித்த காலம் போய், வெளிமாநில மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து படிக்கிற ஒரு சூழலை கலைஞர் உருவாக்கினார். கல்வியில் மட்டுமன்றி தொழில் வளர்ச்சியிலும் தமிழ்நாட்டை பல்வேறு உயரங்களுக்கு கலைஞர் எடுத்துச் சென்றார். வேலைவாய்ப்பை பெருக்கினார். கலைஞருடைய வழியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசும் செயல்பட்டு வருகின்றது. அதற்கு ஒரு சாட்சி தான் இந்த நான் முதல்வன் திட்டம்.

 

படிக்கின்ற இளைஞர்கள் ஒவ்வொருவரையும் அவரவர் துறையில் முதல்வர்கள் ஆக்க வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட திட்டம் தான் இந்த நான் முதல்வன் திட்டம். இந்த திட்டத்தின் கீழ் ஓராண்டில் 10 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இலக்கை தாண்டி 13 லட்சம் இளைஞர்கள் பயிற்சி பெற்றனர். நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 61 ஆயிரத்து 921 பொறியியல் மாணவர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். இதில் அதிகபட்சமாக வருடத்திற்கு 40 லட்சம் ஊதியத்துடன் மாணவர்களுக்கு வேலை கிடைத்துள்ளது. கலைக் கல்லூரிகளை பொறுத்தவரை இதுவரை 57 ஆயிரத்து 312 மாணவர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். இன்றைக்கு நடைபெறுகிற இந்த நிகழ்ச்சியில், ஆண்டு ஊதியமாக 2 லட்சத்தில் தொடங்கி 29 லட்ச ரூபாய் வரை பெறக்கூடிய வகையில், பணி நியமன கடிதங்களை வழங்கியுள்ளோம்.

 

வளர்ந்து வரும் தொழில்நுட்ப தேவைகளுக்கு ஏற்ப தமிழ்நாட்டு மாணவர்களுக்கு திறன் பயிற்சிகளை வழங்கி, அதன் மூலம் வேலைவாய்ப்புகளை பெருக்கவே நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டது. முதலில் பொறியியல் கல்லூரிகளில் மட்டுமே இந்த திட்டத்தின் மூலம் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதனுடைய தேவை உணர்ந்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிறுவனங்கள், பள்ளிக் கூடங்கள் என அனைத்து கல்வி நிலையங்களுக்கும், இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.” என்றார். 

 

இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை செயலர் தாரேஷ் அகமது, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழக மேலாண்மை இயக்குநர் ஜெ. இன்னசென்ட் திவ்யா எனப் பலரும் கலந்து கொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மூன்று மணி நேர தேடுதலுக்குப் பின் உடல்கள் மீட்பு; கிரிவலம் சென்று திரும்பியபோது நிகழ்ந்த சோகம்

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
nn

செஞ்சி அருகே சாலையோர விவசாய கிணற்றில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சிராஜ் - சத்யா தம்பதி தங்களது குடும்ப உறுப்பினர்கள் ஒன்பது பேருடன் திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்றிருந்தனர். திருவண்ணாமலையில் கிரிவலத்தை முடித்துக் கொண்டு விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்துள்ள புலிவந்தி கிராமத்தில் உள்ள அவர்களுடைய குலதெய்வ கோயிலுக்கு சென்றுள்ளனர்.

பின்னர் நள்ளிரவில் விழுப்புரம் கப்பை கிராமத்தில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்பொழுது ஒன்பது பேரும் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த நிலையில் அவர்கள் சென்ற ஆட்டோ நிலை தடுமாறி சாலையோர கிணற்றில் கவிழ்ந்தது. இதில் அனைவரும் நீரில் மூழ்கினர். நான்கு பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் நீரில் தத்தளித்து பின்னர் கிணற்றில் இருந்து வெளியேறினர்.

இதில் ஆட்டோ  ஓட்டுநரின் மகன்கள் பிரகதீஸ்வரன், ஹரி பிரசாந்த் ஆகிய இருவரும் நீரில் மூழ்கினர். உடனடியாக மீட்புப் படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் கிணற்றிற்குள் இறங்கி நடத்திய சுமார் 3 மணி நேர தேர்தலுக்குப் பிறகு இரண்டு சிறுவர்களின் உடல்களையும் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட உடல்கள் செஞ்சி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. செஞ்சி போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் ஆட்டோ விவசாய கிணற்றில் கவிழ்ந்து இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

எல்.கே. சுதீஷ் மனைவியிடம் நூதன முறையில் மோசடி: இருவர் கைது

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
  dmdk excutive LK Suthish wife incident

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே. சுதீஷ். இவர் தேமுதிகவில் துணை செயலாளர் பொறுப்பில் உள்ளார். இந்நிலையில் இவரது மனைவியான பூர்ண ஜோதி சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சமீபத்தில் புகார் மனு அளித்திருந்தார். அதில், “எனக்கும் எனது கணவருக்கும் சொந்தமாக சென்னை மாதவரம் மெயின் ரோடு 200 அடி சாலையில் சுமார் 2.10 ஏக்கர் காலியிடம் இருந்தது. அதில், அடுக்குமாடி வீடுகள் கட்டி விற்பனை செய்வதற்காக தனியார் கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த சந்தோஷ் சர்மா (வயது 44) என்பவரின் நிறுவனத்துடன் கடந்த 2014 ஆம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் செய்தோம்.

அதன்படி மொத்தம் 234 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி அதில் 78 வீடுகளை நில உரிமையாளரான எனக்கும், 156 வீடுகளை சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்துக்கும் ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில் தனக்கு ஒதுக்கிய 78 வீடுகளில் 48 வீடுகளை எனக்கு தெரியாமல் எனது கையெழுத்தை போலியாக போட்டு சந்தோஷ் சர்மாவின் கட்டுமான நிறுவனம் வெளி நபர்களுக்கு விற்பனை செய்துள்ளது. அதன் மூலம் சுமார் ரூ.43 கோடி மோசடி நடைபெற்றுள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவன உரிமையாளரான சந்தோஷ் சர்மா, அந்நிறுவனத்தின் மேலாளர் சாகர் (வயது 33) மற்றும் இந்த முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தனது புகாரில் தெரிவித்து இருந்தார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டிருந்தார். இதன் பேரில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து சந்தோஷ் சர்மா,சாகர் ஆகிய இருவரையும் நேற்று முன்தினம் (21.02.2024) கைது செய்து  நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.