Skip to main content

ராஜபாட்டையாக முதல்வராக்க வேண்டும்.. கலைஞர் கூறியது என்ன? மனம்திறந்த துரைமுருகன்!

Published on 25/03/2018 | Edited on 25/03/2018
duraimurugan


திமுக ஈரோடு மண்டல மாநாடு இன்று இரண்டாம் நாளாக நடந்து வருகிறது. இன்றைய நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன், குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க திமுக முயலாது என்று கூறிய அவர், மேலும் ஒரு தலைவர் தொண்டர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு கலைஞர் தான் உதாரணம். அதேபோல், ஒரு தொண்டன் தலைவரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கும் அவர் தான் உதாரணம்.

உடல்நலக்குறைவாக உள்ள சூழ்நிலையில், அவருக்கு இருக்கும் ஒரே பிரச்சனை சளி தான். ஒரு நாள் மருத்துவர்கள் சளியை வெளியே எடுக்க தொண்டைக்குள் இருக்கும் கருவியை எடுத்து தலைவரை பேச சொன்னார்கள். அப்போது மருத்துவர்கள் உங்கள் பெயர் என்ன? என கேட்டார்கள் உடனே அவர் மு.கருணாநிதி என்றார்.

அடுத்ததாக, உங்களுக்கு யாரை பிடிக்கும் என்றார்கள்? அப்போது, அருகில் இருந்த நான் தலைவர் யாரை சொல்கிறார் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன், அண்ணியை சொல்லியிருக்கலாம், ஸ்டாலினை சொல்லியிருக்கலாம், ஆனால் தலைவர் அடுத்த நொடியே அண்ணா என்றார்.

ஆக, தான் தலைவராக ஏற்றுக்கொண்ட அண்ணாவை அவர் சொன்னார். இதன் மூலம் தலைவரிடம் ஒரு தொண்டர் எப்படி இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. அதேபோல் ஒரு நாள் கடையநல்லூரை சேர்ந்த ராஜமாணிக்கம் என்ற தொண்டர் ஒருவர் தலைவரை சந்திக்க வீட்டுக்கு வந்தார். அப்போது தலைவரிடம் ராஜமாணிக்கம் தன் உள்ளக் குமுறலை படபடவென தெரிவித்தார். அதற்கு கலைஞர் போய்யா எனக் கடுப்பாக கூறிவிட்டார். அதைக் கேட்ட ராஜமாணிக்கம் அழுதுக்கொண்டே வெளியே சென்றுவிட்டார்.

ஒரு 5 நிமிடம் கலைஞர் தனியாக உட்கார்ந்திருந்தார். அதன்பின் கோபம் தனிந்த பின்னர் என்னிடம், ராஜமாணிக்கத்தை அதிகமாக திட்டிவிட்டேனா? என கேட்டார். நான் இல்லை கொஞ்சமாகத் தான் திட்டினீர்கள் என்றேன். அவர் உடனே போய் அவரை கூப்பிட்டு வா என கூறினார். நான் உடனடியாக அழுதுக்கொண்டிருந்த ராஜமாணிக்கத்தை தலைவரிடம் கூட்டி சென்றேன். உள்ளே சென்றதும், ராஜமாணிக்கம் என்னை மண்ணித்துவிடு, நான் திட்டிவிட்டேன் என்றார். இதைக்கேட்ட ராஜமாணிக்கம் கண்ணீர் விட்டார். இப்படி ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் தலைவர் கலைஞர் தான் உதாரணமாக இருந்தார்.

அந்த இரண்டு பண்புகளும் செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இருக்கிறது. அவருடன் நெருக்கமாக இருந்த பார்த்து வருகிறேன். எந்த நேரத்திலும் திராவிட இயக்கத்தின் சுயமரியாதையை விட்டுக்கொடுக்காத ஒரு தலைவராக செயல்தலைவர் ஸ்டாலின் இருக்கிறார்.

எல்லாரும் கூறுகிறார்கள் தலைவர் கலைஞர் செயல்படுவது மாதிரி இருந்தால், இந்த ஆட்சியை நீடிக்க விட்டிருப்பாரா? எப்போதோ ஆட்சியை கலைத்திருப்பாரே, நாம் ஆட்சிக்கு வந்திருப்போம் என சொல்கிறார்கள். ஆனால் அதற்கெல்லாம் நான் பதில் சொல்லிகொள்ள விரும்புகிறேன். கலைஞர் உடல்நலத்துடன் இருக்கும் போது, ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பேசிக்கொண்டிருந்தோம் அப்போது, அவர் உடல்நலத்துடன் நீண்ட நாள் இருக்க வேண்டும். அப்படி ஏதாவது ஒரு சூழ்நிலை வந்தால் அந்தகட்சி இரண்டாக உடையும், வலுவான ஒரு கூட்டம் உங்களிடம் வருவார்கள், அப்போது நீங்கள் அவர்களுக்கு ஆதரவு கொடுக்க சொல்லி கேட்பார்கள், ஆனால் எக்காரணம் கொண்டும் அவர்களுக்கு நாம் ஆதரவு கொடுத்துவிடக் கூடாது. ஏனெனில் பின் நம் ஆட்களுக்கு கட்சி இருக்காது, அது அழிந்து போய்விடும். அழிந்து போன கட்சிக்கு நம் மூலம் ஒரு வாழ்வு கொடுக்கக் கூடாது என்பது கலைஞரின் விருப்பம்.

அதேபோல், நீங்கள் எல்லோரும் விரும்பவது போல் ஸ்டாலினை முதலமைச்சாரக்க வேண்டுமென்றால் குறுக்கு வழியில் வரக்கூடாது நேர்வழியில் ராஜபாட்டையாக தான் மு.க.ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும். திமுக எப்போதும் குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்கும் கட்சி கிடையாது. அப்படி ஒரு சூழல் வந்தால் ’ஸ்டாலின் குறுக்கவழியை பிடித்து ஆட்சிக்கு வந்தார் என்று வரலாறு சொல்லும்’. ஏனவே அதுக்கூடாது என கலைஞர் என்னிடம் கூறினார்.

”இந்த ஆட்சியை கலைப்பது மிக சாதாரண விஷயம்”, ஆனால் அதை நாங்கள் செய்யமாட்டோம். நேர் வழியில் திமுக சொல்ல வேண்டும் என்பதற்காக தான் நாம் காத்திருக்கிறோம் என துரைமுருகன் உணர்ச்சிப்பூர்வமாக பேசினார்.

சார்ந்த செய்திகள்