Kalaignar Memorial Library in Madurai

மதுரையில் அமையவுள்ள கலைஞர் நினைவு நூலகத்திற்கு இடம் தேர்வு செய்வதற்காக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் ஆய்வுசெய்தனர்.

Advertisment

மதுரையில் 70 கோடி ரூபாய் மதிப்பில், 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடிய நூலகம் அமைக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதற்காக மதுரை நகர் பகுதிகளில் 6 இடங்கள் பரிசீலனையில் உள்ள நிலையில், அதில் எந்த இடத்தில் நூலகம் அமைக்கலாம் என்பது குறித்து தற்போது ஆய்வு நடைபெற்றுவருகிறது.

Advertisment

மதுரை மாட்டுத்தாவணிபேருந்து நிலையம் அருகில், உலக தமிழ்ச்சங்க வளாகம் அருகில், மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி அருகில், மாநகராட்சி பொது பண்டக சாலை, எல்லீஸ் நகர் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு சாலை உள்ளிட்ட 6 இடங்கள் பரிசீலனையில் உள்ள நிலையில் 6 இடத்தையும் நேரில் ஆய்வுசெய்து இடம் தேர்வு செய்யப்பட உள்ளது.

பின்னர் பேட்டியளித்த அவர், “மதுரையில் கலைஞர் நூலகம் அமைப்பது தொடர்பாக 6 இடங்களைத் தேர்வு செய்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. மக்கள் அதிகமாக வந்து செல்லும் வகையிலும் சாலை வசதி கொண்ட இடத்தைத் தேர்வு செய்யப்படும். முழுவதும் குளிரூட்டப்பட்ட 7 தளங்களைக் கொண்டதாக கலைஞர் நூலகம் அமைய உள்ளது. 24 பகுதியாக பிரிக்கப்பட்டு நூலகம் அமைய உள்ளது. ஒரே நேரத்தில் 600 வாசகர்கள் அமர்ந்து படிக்கும் வகையில் நூலகம் அமைக்கப்படுகிறது.

கலைஞர் நூலகம் அமையும் இடத்தை முதல்வர் தேர்வு செய்வார். இடம் தேர்வு செய்யப்பட்டு ஓராண்டுக்குள் பணிகள் முடிக்கப்படும். தமிழ் வளர்த்த மதுரையில் தமிழாகவாழ்ந்த கலைஞருக்கு நூலகம் அமைவதுசாலப் பொருத்தமாக இருக்கும்” என்று தெரிவித்தார்.