kalaignar Library in Trichy Release of government order

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு உரையாற்றினார். அப்போது, ‘திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் திருச்சியில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்க ரூ. 290 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

Advertisment

மேலும் இந்த நூலகம் அமைப்பதற்கான நிர்வாக அனுமதியையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார். இந்த நூலகம் 4.57 ஏக்கர் பரப்பளவில் தரை மற்றும் 7 தளங்கள் கொண்ட கட்டடமாக அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ‘காவிரிக் கரையில் அமைந்த மாநகரமான திருச்சிராப்பள்ளி மாநகரில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும்’ என அறிவித்திருந்தார்.

Advertisment

அதனைச் செயல்படுத்தும் விதமாகக் கலைஞர் பெயரிலான நூலகத்தை ரூ.290 கோடி மதிப்பீட்டில் அமைப்பதற்கான நிர்வாக அனுமதியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசாணையின் மூலம் வழங்கியுள்ளார். திருச்சி மாவட்ட மக்களின் சார்பாகவும், டெல்டா மாவட்ட இளைஞர்கள், வாசகர்கள், எழுத்தாளர்களின் சார்பாகவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.