
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞரின் பிறந்தநாள் ஜூன் 3ஆம் தேதி. அவரது பிறந்தநாளில் திமுகவினரின் உற்சாகம் பன்மடங்கு அதிகரிக்கும். தமிழகம் முழுவதும் பல்வேறு உதவிகளைப் பொதுமக்களுக்கு வழங்கி கலைஞரின் பிறந்தநாளைக் கொண்டாடி மகிழ்வர்.
ஆறாவது முறையாக திமுக ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் நிலையில், வருகிற கலைஞரின் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட திமுகவினர் பெரிய அளவில் திட்டமிட்டிருந்தனர். ஆனால், கரோனாவின் இரண்டாவது அலையிலிருந்து மக்களைக் காப்பாற்ற முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு கடுமையாக உழைத்துவருகிறது.
இந்நிலையில், கலைஞரின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை அமர்களப்படுத்த திமுகவினர் திட்டமிட்டிருப்பதை அறிந்து, திமுக உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதியிருக்கிறார் ஸ்டாலின். அதில், “ஊரடங்கு காலம் என்பதால் கலைஞரின் பிறந்தநாள் நிகழ்வுகளைப் பொதுவெளியில் கொண்டாட வேண்டாம். கலைஞரின் உருவப்படத்தினை அவரவர் இல்லங்களில் வைத்து மரியாதை செலுத்திக் கொண்டாடுங்கள். இந்த ஊரடங்கு காலத்தில், உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை எதிர்பார்த்திருக்கும் ஏழை எளிய மக்களுக்கு அவர்களின் இருப்பிடத்துக்கே சென்று உதவிகளை செய்து மகிழுங்கள்.
உதவிகள் செய்யும்போது, அதிகாரிகளின் அனுமதியைப் பெற்றும், கரோனா கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்தும், முகக் கவசம் அணிந்தும், தனிமனித இடைவெளியைப் பின்பற்றியும் கவனமாக செயலாற்றுங்கள். அதனால் கலைஞரின் பிறந்தநாளை எளிமையாகவும், அமைதியாகவும் கொண்டாடுங்கள். வரும் ஆண்டுகளில் பெருமகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்” என்று தெரிவித்திருக்கிறார்.