Skip to main content

’’காலம் தந்த தலைவன்’’-கலைஞர் நினைவஞ்சலி கட்டுரை

Published on 07/08/2019 | Edited on 09/08/2019

 

காலம் தனக்கான தேவைகளை தானே எதிர்கொள்கிறது.  சூழல்களுக்கு ஏற்ப தன்னை தகவமைத்து கொண்டு மாற்றங்களை நோக்கி தினமும் பயணிக்கிறது. அப்படிப்பட்ட பயணத்தில் புரட்சிகளும் புதுமைகளும்  பூக்கின்றன. மானுடம் செழிக்கிறது. ஆண்டாண்டு காலம் அடிமைப்பட்டு மூட நம்பிக்கை என்னும் இருளில் உழன்று ஒடுக்கப்பட்ட சமூகத்தில் அவர்களின் குரலாய் ஒலிக்க ஒரு தலைவனை காலம் பிரசவித்தது அந்த மாபெரும் அரசியல் ஆளுமையின் பெயர் தான் கலைஞர் !

 

k

 

இந்திய துணைக்கண்ட அரசியல் வரலாற்றில் மூன்று அரசியல் தத்துவங்களை தவிர்த்து விட்டு வரலாற்றை வாசிக்க முடியாது. அந்த மூன்றும் நுட்பமான இந்த  மண்ணுக்கான மானுட அரசியலை பேசும் இயக்கங்கள் . ஒரு நூற்றாண்டு கடந்த பின்னும் அந்த இயக்கங்கள் இந்தியாவின் அரசியல் போக்கை தீர்மானிக்கும் சக்திகளாகவே இருக்கின்றன.

 

இந்தியாவின் வட புலத்தில் தோன்றி சுதந்திர போராட்டத்தை முன்னெடுத்த காங்கிரஸ் பேரியக்கம், உலக முதலாளித்துவ சிந்தனைகளுக்கு எதிராக முகிழ்த்த கம்யூனிஸ்ட் இயக்கம், இந்தியாவின் தென் புலத்தில் சமத்துவம் சமூக நீதி பகுத்தறிவு முழக்கங்களை முன்னிறுத்தி திராவிடர் இன அரசியல் வடிவமாய் தோன்றிய திராவிட இயக்கம் என்கிற மூன்று இயக்கங்களும் காலத்தின் தேவைக்கேற்ப உருவானவையே. இந்த மூன்று தத்துவங்களும்  ஒன்றிற்கொன்று மாறுபட்டிருந்தாலும் ஜாதி, மதத்தை முன்னிறுத்தும் சனாதனங்களுக்கு எதிராகவும் மண் விடுதலை மக்களின் விடுதலை முன்னிறுத்தியும்  செயலாற்றியும் வருகின்றன.  

 

நூற்றாண்டு வரலாறு கொண்ட திராவிட இயக்கம்  நீதிக்கட்சி, திராவிடர் கழகம், திராவிடர் முன்னேற்ற கழகம் என பல பரிணாமங்களை காலத்தின் தேவைக்கேற்ப எடுத்திருந்தாலும், அதன் அடிப்படை கொள்கைகளை ஆட்சி அதிகாரம் கொண்டு நிறைவேற்றிய பெருமை அய்ம்பது ஆண்டுகாலம்  அந்த அரசியல் இயக்கத்திற்கு தலைமை தாங்கிய டாக்டர்.கலைஞர் அவர்களையே சாரும். சமூக மாற்றத்திற்கான எண்ணற்ற திட்டங்கள் நீண்ட தொலைநோக்கோடு தந்த வரலாற்று நாயகர் அவர். திராவிட இயக்கத்தின் மூலவர் தந்தை பெரியார் “கல்வி அறிவும், சுயமரியாதையும், பகுத்தறிவுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்” என்றார் . அந்த உன்னத குறிக்கோளை நோக்கியே தமது ஆட்சியை வடிவைமைத்திருந்தார் கலைஞர்.

 

ch

 

காங்கிரஸ் பேரியக்கம் தமிழ்நாட்டை ஆட்சி செய்தபோது இராஜாஜி பல்வேறு காரணங்களை காட்டி 6௦௦௦  பள்ளிகளை இழுத்து மூடினார். ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி உரிமைக்கு வேட்டு வைக்கும் விதமாக குலக்கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தினார். சமூகநீதிக்கு எதிரான இந்த போக்கை திராவிடர் இயக்கம் வெகு மக்களின் போராட்டமாய் மாற்றியது. போராட்டக்களத்தை  தந்தை பெரியார் முன்னின்று நடத்தினார்.

 

தமிழ்நாட்டு அரசியல் ஆதிக்க ஜாதியினர் கைகளில் இருந்து ஒடுக்கப்பட்ட மக்களின் கைகளுக்கு மாறியது. பெரியாரின் திராவிட இயக்க கொள்கைகளின் தாக்கம் காங்கிரஸ் இயக்கத்திலும் எதிரொலிக்க ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து  வாராது வந்த மாமணியாய் திராவிட இயக்க சிந்தனைகளுக்கு செயல்வடிவம் தருகின்ற கர்மவீரராக  காமராஜர் காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைமை பொறுப்புக்கு வந்தார். மூடப்பட்ட  பள்ளிகளை எல்லாம் திறந்தார்.  ஆயிரக்கணக்கான  பள்ளிகளை கட்டி இலவச கட்டாயக் கல்வியை வலுப்படுத்தினார்.  அதைக்காட்டிலும் மேட்டிலும் காடு கழனியில்  சுற்றி திரிந்தவனை கல்வி சாலைக்குள் கொண்டு வந்த பெருமகன் காமராஜர். அப்படி கல்வி பயில வந்தவனை கைப்பிடித்து உயர் கல்விவரை அழைத்து வந்து கற்றறிவாளனாக மாற்றிய பெருமை  டாக்டர் கலைஞரையே  சாரும்.

 

கல்வி ஒன்று தான் உலகத்தையே மாற்றி அமைக்கும் கருவி என்றார் நெல்சன் மண்டேல்லா. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுயர்வு  கல்வி மூலமே சாத்தியம் என்றுணர்ந்து அடுக்கடுக்கான திட்டங்களை தீட்டி மாபெரும் கல்வி புரட்சியை காமராஜரின் நீட்சியாய் தொடர்ந்தார் டாக்டர் கலைஞர். நாடு விடுதலை பெற்ற பின் கல்வி அனைத்துத் தரப்பினருக்கும் கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அதை வழங்குவதில் ஏற்றத் தாழ்வுகள் இருந்தன. கிராமப்புற மாணவர்களுக்கும், சமுதாயத்தில் அடித்தளத்தில் உள்ளவர்களுக்கும் சிறப்பான முறையில் கல்வி வசதிகள் சென்றடையவில்லை. இவற்றையெல்லாம் உணர்ந்து கலைஞர் அவர்கள் சமச்சீர் கல்வி திட்டத்தை அறிவித்து பெரும் மாற்றத்தை உருவாக்கினார். கிராமப்புறங்களில் ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளி என்ற நிலைமை மாறி 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற வகையில் மாற்றினார்.

 

பத்தாம் வகுப்புத் தேர்விலும் 12ஆம் வகுப்புத் தேர்விலும் மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்களது உயர் கல்விச் செலவு, பட்டதாரிகள் இல்லாத குடும்பங்களில் இருந்து ஒவ்வொரு வகைத் தொழில் கல்விப் பிரிவுகளிலும் சேரும் முதல் பத்து நிலை மாணவர்களின் கல்விச் செலவை அவரது அரசு ஏற்றது. அதுப்போல தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்துவதற்கு தமிழ்நாடு பள்ளிகள் (கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்துதல்) சட்டம் அவருடைய அரசு தான் இயற்றியது. 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழி பயிலும் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு ஆண்டுக்கு ஏறத்தாழ 10 லட்சம் மாணவ மாணவியர் பயன் பெற்று வருகின்றனர் .

 

சத்துணவுடன் வாரம் 2 முட்டைகள்,  மதிய உணவு திட்டத்தின் கீழ் முட்டை உண்ணாத மாணவர்களுக்கு  வாழைப் பழங்கள், இலவச பாடப்புத்தகம் வழங்கும் திட்டமும், பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பயண திட்டமும், 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சாதிச்சான்றிதழ், இருப்பிடச் சான்று, வருவாய்ச் சான்று ஆகியன பள்ளியிலேயே வழங்கும் திட்டமும் அவர் அரசின் சாதனைகளில் ஒன்று.

 

முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் முன்னுரிமை, கிராமப்புற மாணவர்களுக்கு உயர் கல்விகளில் தனி இட ஒதுக்கீடு, தமிழறிஞர்களின் பிள்ளைகளுக்கு பொறியியல், மருத்துவப் படிப்புகளில் இட ஒதுக்கீடு, கல்வித் துறையில் இளங்கலை, முதுகலைப் பட்டப் படிப்புத் தேர்வுகளை (Compound system) நடைமுறைப்படுத்தல், நுழைவுத் தேர்வு ரத்துக்கு நிபுணர் குழு அமைப்பு, மருத்துவம் பொறியியல் கல்விக் கட்டணம் குறைப்பு, புதிய  புதிய பல்கலைக்கழகங்கள் பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள்  உருவாக்கம், காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாள் என்று சட்டம் இயற்றல், மாணவர்களின் கல்விக் கட்டணங்கள் அனைத்தும் ரத்து, பள்ளி மாணவர்களுக்கும்-கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பேருந்து பாஸ்,  ஏழை மகளிருக்கு முதுகலைப் பட்டப் படிப்பு வரை இலவசக் கல்வி, சத்துணவு ஊழியர்களுக்கும் காலமுறை ஊதியம், பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடம் எனச் சட்டம் என இப்படி எண்ணற்ற திட்டங்கள் மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மனதில் கொண்டு கொண்டுவரப்பட்டன.

 

ஆழிப்பேரலையால் கடல் கொண்ட பூம்புகார் நகரை நிர்மாணித்தார், தமிழர் கட்டிட கலை கொண்டு தலைநகர் சென்னையில் வான் புகழ் வள்ளுவனுக்கு கோட்டம், குமரி எல்லையில் விண்ணை தொடும் அளவில் வள்ளுவனுக்கு சிலை, உலகின் மிக நீண்ட கடற்கரைகளில் ஒன்றான மெரினாவில் கண்ணகி, அவ்வையார், இளங்கோவடிகள் என தமிழுக்கு தொண்டு செய்த பதினேழு பேர்களின் சிலைகளை நிறுவி எதிகால தலைமுறைக்கு எடுத்துக்காட்டும் விதமாக அமைத்த பெருமை கலைஞரையே சாரும். கலை, இலக்கியம், மொழி, ஊடகம் என பலவற்றிலும் அவர் ஆற்றிய தொண்டு காலம் கடந்து நிற்கும் வரலாற்று செய்திகள்.

 

டாக்டர் கலைஞரின் பல திட்டங்கள் இந்தியாவிற்கே முன்னோடியாக அமைந்தன. இந்தியாவில் அதிகஅளவில் மருத்துவகல்லுரிகள் உள்ள மாநிலம் தமிழ்நாடு தான். மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட வேண்டும் என்பதை தமது அரசின் குறிக்கோளில் ஒன்றாக கொண்டிருந்தார் கலைஞர். நூல்கள் தான் அறிவின் திறவுகோள் என்பதால் பேரறிஞர் அண்ணா பெயரில் உலகத்தரம் வாய்ந்த நூலகத்தை உருவாக்கினார். கிராமந்தோறும் ஊர் புற நூலகம் அய்யன் திருவள்ளுவர் பெயரில் ஊர் தோறும் படிப்பகம், நூல்களை பதிப்பிக்கவும் சந்தைப்படுத்தவும் வெகு மக்களிடம் கொண்டு செல்ல விரிவான திட்டங்கள் என அவரின் தொலைநோக்கு பார்வை எதிர்கால சந்ததியினரின் அறிவு வளர்ச்சிக்கான அடித்தள கட்டமைப்பாக இருந்தது  

 

கல்வி துறையில் அவர் ஆற்றிய சாதனைகள் இனவரலாற்றின் புரட்சிகர பக்கங்களில் ஒன்று. மத்திய அரசின் பொதுப்பட்டியலில் சேர்க்கப்பட்ட  கல்வியை மாநில அரசின் பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும், நுழைவுத்தேர்வு முறைகள்  நீக்கப்பட வேண்டும், கிராமப்புற, அரசு பள்ளி மாணவர்களின் கல்வி  மேம்படவும்  அவர்களின் கல்வி உரிமை பாதுக்காக்கப்பட வேண்டும் போன்ற  சவாலான பணிகள் நம் முன் உள்ளது. இது ஒரு ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுரிமைக்கான போராட்டம். குறுகிய கால இலக்கை நோக்கிய பயணம் அல்ல. இது மிக நீண்ட நெடிய போராட்டங்கள் மிகுந்த  பயணம். அந்த பயணத்தை காலம் தந்த தலைவனாய் கலைஞர் தோன்றி சரித்திர சாதனைகளை படைத்து, தனது பணியை நிறைவாக செய்திருக்கிறார். அடுத்த கட்ட நகர்விற்கான இலக்கை அடையாளம் காட்டி சென்றிருக்கிறார். அந்த மாபெரும் தலைவனுக்கு நன்றிகளையும் வீரவணக்கத்தை செலுத்தி  அடுத்த கட்ட பயணத்தை தொடர்வோம். அதுவே அவருக்கு நாம் செய்யும் புகழாஞ்சலி.’’

 

- வே.சந்திரசேகரன்

தலைவர், முத்தமிழ் இலக்கியப் பேரவை, ஊற்றங்கரை

சார்ந்த செய்திகள்

Next Story

“கலைஞர் உதவி பண்ணலைன்னா, அந்தப் படம் பிணவறைக்கு தான் போயிருக்கும்” - வடிவேலு

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
vadivelu about kalaignar

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் எதிரில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் நினைவிடம் மற்றும் டிஜிட்டல் அருங்காட்சியகம் கடந்த 26ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்டது. பொதுமக்கள் பார்வைக்கு வரும் 6ஆம் தேதி முதல் இலவசமாக அனுமதிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் வடிவேலு கலைஞர் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செய்தார். பின்பு திமுக சார்பில் நடத்தப்பட்ட நலத்திட்ட விழாவில் கலந்து கொண்டு பேசிய வடிவேலு, “கலைஞர் நினைவிடத்தை பார்த்தேன். அது சமாதி இல்லை. சன்னதி. தி.மு.க தொண்டன் ஒவ்வொருத்தருக்கும் அது குல தெய்வக் கோயில். மணிமகுடம் கலந்த மணிமண்டபம். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் நான். ஆனால், கலைஞருடைய தீவிர பக்தன். தீவிர விஸ்வாசி. 

கலைஞருடன் இருக்கும் போது, எம்.ஜி.ஆரை வெளியில் இருந்து தான் பார்த்திருக்கேன். இருவரும் நண்பர்கள் தான்.  ஆனால் கலைஞரின் கதை வசனத்தில் நடிச்சிருக்கேன். இவர் கூட பேசியிருக்கேன், பழகியிருக்கேன். நிறைய விஷயங்களில் அவர் எனக்கு தைரியம் சொல்வார். கலையுலகத்தை அவர் எந்தளவிற்கு நேசிச்சார் என எல்லா மக்களுக்கு தெரியும்.  

ஒரு முறை 23ஆம் புலிகேசி படத்தை ரிலீஸ் பண்ணமுடியல. அவருக்கு ஃபோன் போட்டு சொன்னே. என்ன பிரச்சனைன்னு கேட்டார். ராஜா குதிரைக்கு மேல் போகக்கூடாதாம், ப்ளு கிராஸ்லாம் பஞ்சாயத்தாம் என்றேன். அதற்கு அவர் ராஜா குதிரையில போகாம குவாலிஸ்-லையா போவார். அப்புறம் ஆ.ராசாவிடம் சொல்லி பார்க்க சொன்னார். அதே போல உன் எம்.ஜி.ஆர் நடிச்ச காஞ்சி தலைவன் படத்துல ஒரு பஞ்சாயத்து நடந்துச்சு,  அப்ப அத சரி பண்ண முடியல. அதுக்கப்புறம் இந்த மேட்டர் என்றார். கண்டிப்பா இந்த படம் ரிலீஸாகிடும் என்று தைரியம் கொடுத்தார். அப்புறம் ரிலீஸ் பண்ண வைச்சதும் கலைஞர் தான். அவர் பண்ணலைன்னா நேரா பிணவறைக்கு தான் போயிருக்கும். அதுக்கப்புறம் தான் படம் ரிலீஸாகி வெற்றி பெற்றுச்சு. அதுமட்டுமல்ல, கலைஞர் டிவி ஆரம்பித்த பிறகு, அந்தப் படத்தை அதில் வெளியிடச்செய்தார். 

திராவிடம்-னா என்னான்னு கேட்கிறவங்க எல்லாம் ஒரே ஒரு முறை மணிமண்டபத்தை சுத்தி பாக்கணும். உள்ள அவ்ளோ அழகா இருக்கு. அதை பார்க்க இரண்டு கண்ணு பத்தாது. ஆயிரம் கண்ணு தேவைப்படும். வரலாற்றில் இப்படி ஒரு மணிமண்டபத்தை கட்ட யாராலையும் முடியாது. யாருக்கும் அந்த வரலாறு கிடையாது” என்றார். மேலும், “சகோதரர் அமைச்சர் உதயநிதி. அவர் விளையாட்டா இருந்தாலும் அலர்ட்டா இருக்கணும். ரொம்ப பயங்கரமான ஆளு. அவர்கிட்ட பேசி தப்பிக்க முடியாது. பெரிய தைரியசாலி” என்றார். 

Next Story

கலைஞர் சிலை திறப்பு விழா; அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அழைப்பு

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Minister Anbil Mahesh invites kalaignar Statue Unveiling Ceremony in trichy

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் மணப்பாறையில் இன்று (01-03-24) முன்னாள் முதல்வர் கலைஞரின் உருவச்சிலை திறப்பு விழா நடக்கிறது. இந்த விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்துகொண்டு, கலைஞரின் உருவச்சிலையை  திறந்து வைக்கிறார்.

இதுகுறித்து திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘தி.மு.க தலைவரின் அறிவுறுத்தலின்படி, கலைஞர் நூற்றாண்டு விழா மிக சிறப்பாக திருச்சி தெற்கு மாவட்டத்தில் வருடம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 

இதன் அடிப்படையில் இதுவரை 90 நிகழ்ச்சிகள் முடிக்கப்பட்டு தற்போது 91-வது நிகழ்ச்சியானது, கலைஞர் நூற்றாண்டு விழாவில் மற்றொரு நிகழ்வாக சட்டமன்ற தொகுதிக்கு ஒரு சிலை என்ற அடிப்படையில் திருச்சி தெற்கு மாவட்டத்தில் மணப்பாறை தொகுதியில் இன்று (01-03-24) மாலை 3.30 மணிக்கு மணப்பாறை மாட்டுச்சந்தை அருகில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் கலைஞரின் திருவுருவச் சிலையைத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி திறந்து வைக்க உள்ளார். இந்த விழா கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு முன்னிலையிலும், எனது தலைமையிலும் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளைக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், மாநகராட்சி, ஒன்றிய நகர, பேரூர் கழக சேர்மன்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கழகத் தொண்டர்களும் பொதுமக்களும் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.