எங்கே போனாய்?
-ஆரூர் தமிழ்நாடன்
திருக்குவளைச் சூரியனே எங்கே போனாய்?
திசையளந்த தமிழ்முனியே எங்கே போனாய்?
கருக்கலென வந்தவனே எங்கே போனாய்?
கனவுகளின் நாயகனே எங்கே போனாய்?
பெரும்புகழாய்ச் சுடர்ந்தவனே எங்கே போனாய்?
பெரியாரின் செயல்வடிவே எங்கே போனாய்?
அருஞ்செயலால் நிலைத்தவனே எங்கே போனாய்?
அண்ணாவின் மறுவடிவே எங்கே போனாய்?
அகவிளக்கே! யுகவிளக்கே! எங்கே போனாய்?
ஐந்துமுறை ஆண்டவனே எங்கே போனாய்?
முகவரியாய் இருந்தவனே எங்கே போனாய்?
முதுமையிலும் உழைத்தவனே எங்கே போனாய்?
அகம்வெடிக்க அழுகின்றோம் எங்கே போனாய்?
அலைகடலே! தமிழ்க்கடலே! எங்கே போனாய்?
முகம்பார்க்கத் தவிக்கின்றோம் எங்கே போனாய்?
முழுநிலவே! எமைவிட்டு எங்கே போனாய்?