Skip to main content

கலைஞர் ஆற்றிய கவிதை உரை....

Published on 03/06/2018 | Edited on 03/06/2018
kalaignar 6666.jpg


1986 செப்டம்பர் 15... சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்த முப்பெரும் விழாவில் தலைவர் கலைஞர் ஆற்றிய தலைமைக் கவிதை உரை ....

வணக்கம்... 

பெருந்தகையாளர் எங்கள் இனமான பேராசிரியர்க்கும்... 
அமைதிநிறை சாதிக் அவர்களுக்கும்... 
ஆருயிர் இளவல் நாஞ்சிலார்க்கும்... 
பேரன்பு கொண்ட பெரியோர்க்கும் வணக்கம்...

பெருமைமிகு தாய்மார்க்கும்.., 
பேரறிஞர் அண்ணா கவியரங்கில் பீடு நடை தமிழ் பாட வந்துள்ள நீடுபுகழ் கவிஞர்க்கும் வணக்கம்...

மருதுயிருவர் போல வந்து பெரியார், அண்ணா விருது பெற இருக்கின்ற அன்பில், அண்ணாமலை இருவர்க்கும்.., 
பட்டிமன்ற நடுவர் பதவிக்கென்றே பிறந்திட்ட பகுத்தறிவு பண்பாளர் நன்னனுக்கும் வணக்கம்...

மாவட்ட செயலாளர் தம்பி பாலுவுக்கும்.., 
மற்றுமுள்ள கழக முன்னோடி செயல் வீரர்களுக்கும்.., 
தீரமுடன் ஏடு நடாத்தி தமிழக பண்பு காக்கும் தினகரன் K.P. கந்தசாமிக்கும்...,
இன்று முழங்குவது போல் இசை ஒலியை, அன்று முதல் அழைக்காமலே வந்து ஆர்கின்ற இசைமுரசு ஹனிபாவிற்க்கும்.. உள்ளத்தில் அழியாத ஓவியமாய் நிலைத்துவிட்ட என் உயிரினும் மேலான உடன்பிறப்புகள் அனைவருக்கும் வணக்கம்...

பல்வேறு தலைப்புகளில் அண்ணா பற்றி பலாச்சுலை சொல்லெடுத்து பாவலர்கள், கல் மீது எழுத்தாக காலத்தால் அழியாத கவிதை சேர்க்க வந்துள்ளார். 
கலைவாணர் அரங்கத்தில்... கவிவாணர் அரங்கம் இன்று...

காதில் விழுகிறது சிலபேரின் கேலிச் சிரிப்பு... 
கவியரங்கம் ஒருகேடா கழகத்திற்கு, 
விழா நடத்த சிறிதேனும் வெட்கம் இலையோ இவர்களுக்கு...

வெற்றி பெற்ற நாமிங்கே வீரவாள் சுழற்றி நிற்க, 
வீணர்களுக்கென்ன முப்பெரும் விழா வேண்டி கிடக்குதென ஆவணக் குரல் ஒன்று கேட்குதங்கே...
விளக்கமொன்று அவர்களுக்கும் உங்களுக்கும் சொல்வேன் நான்....

விளக்கை அணைத்துவிட்டு வீட்டுக்குள் புகுந்த திருடன்.. 
அகப்பட்டதை சுருட்டிக் கொண்டு அகப்படாமல் ஓடியதுபோல்... 
அருப்புக்கோட்டை, நெல்லை தொகுதிகளை வென்றுவிட்டார்..

இதற்குத்தான் நான் முன்பே சொன்னேன், இந்த இடியமீன் ஆட்சியிலே நமக்கு இடைத்தேர்தல் எண்ணம் எள்முனையும் வேண்டாமென்று... 
இருந்தாலும் போர்க் களத்தில் விழுப்புண் பெறுவதே பெருமையென்று, 
இனிய உடன்பிறப்புகள் எல்லோரும் இருகருத்துக்கிடமின்றி எடுத்துரைத்த காரணத்தால், 
பணநாயக படை எதிர்த்து நமது ஜனநாயக படை மோதிற்று...

மறைந்திருந்து மானமிகு வாலியை வீழ்த்திய, மாண்புமிகு ராமச்சந்திரனை... 
மாவீரன் என்று போற்ற மகாகவி கம்பனே தயங்கினானென்றால்...
மாண்டாலும் வெற்றி வாலிக்குத்தானே... 
ஆண்டாலும் அவன் தம்பி சுக்ரீவன் துரோகி தானே... 
எனவே விழுந்தாலும் விழுப்புண் பெற்றவர்தான் வீரர்கள் பட்டியலில் இடம்பெறுவர்...

தாழ்ந்தாலும் தமிழன் தன்மானம் இழந்து தன் தலையை மட்டும் தாழ்த்தமாட்டான்...
தாய் தந்தையரை நன்றியுடன் போற்றும் தனிப் பண்பாட்டை மறக்கமாட்டான்... 
தாயாக தமிழர்க்கு அண்ணாவும், தந்தையாக பெரியாரும் வாய்த்ததாலே... 
அவருக்கு சேயாக விளங்குகின்ற திமு கழகம் செய்நன்றி சிறிதளவும் மறவாமல்... 
இன்று, தெருமுனையில் பட்ட புண்னை சிரிப்பாலே ஆற்றி வருங்கால வெற்றிக்கு வழிவகுக்க காண்பீர்...

இதயத்தை விட்டு அகலா ஈரோட்டு பள்ளியையும்... 
என்றைக்கும் பசுமையான காஞ்சி கல்லூரியையும் ஏக்கப் பெருமூச்சுடனே எண்ணி புரண்டவாறு என் படுக்கையிலே நெளிந்திட்டேன் நேற்றிரவு... 
அப்போது, பக்கமது நெருக்கமாக படுத்துக் கொண்டு வெட்கமது ஒருசிறிதுமில்லாமல் எனை ஒருத்தி ஓடிவந்து தழுவிக் கொண்டாள்... 
அவளை அள்ளி அனைப்பதற்கு முயலவில்லையென்றாலும், தள்ளிவிட மனமில்லை தழுவட்டும் என்றிருந்தேன்... 
அதன் பின்னர் மற்றொருத்தி வந்தாள். அவள் வானவில் சதுராட்டக்காரி... வானம்பாடியென இசைக் கூட்டும் மாயக்காரி... 
என்ன இது...? இருமங்கை... ஒரு படுக்கை எனக் கேட்பீர்... பொறுத்திருக...

முதலில் வந்தவள் பேர் தூக்கம்... மற்றொருத்தி கனவு மங்கை... 
அந்த கனவிலே நான் கண்ட காட்சியெல்லாம் தமிழ் காட்சி... தமிழர் மாட்சி... 
அது என்ன கனவு...?

மன்றமொன்றில் இசைவாணன் கீத மழை பொழிகின்றான்... 
மக்களெல்லாம் மது குடித்த வண்டு போல் மயங்குகின்றார்... 
மங்கலமாய் இசை நிகழ்ச்சி முடியும் போது மக்கள் சிலர் ஆர்வமுடன் மேலும் பத்துப் பாட்டு பாடு என்றார்...

மலைத்துவிட்ட இசைவாணன் கணைத்துக் கொண்டு, பாடுகின்றேன் மேற்க்கொண்டு என்ன தொகை தருவீரென்றான்...? 
வெடுக்கென ஒரு புலவன் எழுந்து நின்று விடையுறுத்தான், எட்டுத் தொகை தருவதாக... 
இசைவாணன் புரிந்து கொண்டு, இதென்ன ஞாயம்... எந்தன் பத்துப் பாட்டுக்கு எட்டுத்தொகையா...? அது எனக்கு குறுந்தொகை என்று சொன்னான்...

ஓகோ... ஐங்குறுநூறு வேண்டுமோ எனக் கடிந்தார் புலவர்... 
நூறு வேண்டேன்... அதனை தீண்டேன் தீண்டேன்... 
நானூறு தருவீரோ புலவரே... அதுவும் அகத்தில் நானூறு... புறத்தில் நானூறு என்று வளைத்தனன் இசையில் வல்லவன்...

புறத்தில் நானூறு அகத்தில் நானூறு புரிந்து கொண்டார் புலவர் பெருமகன்... 
புறநானூறு... காசோலையில் நானூறு..., அகநானூறு... கறுப்பில் நானூறு... 
பொல்லாச் செயலது... பொல்லாச் செயலது... வருமான வரிதனை ஏய்ப்போர் செயலது...

அதனாலே, பாட்டுக்கு தொகை கேட்கும் பேச்சுதனை விட்டொழிப்பீர்... 
பசும்பால் தருவோம் தொண்டைக்கி... தேவையெனில் முப்பாலே தருவோம் பாடிடுக என்று சொன்னார்... 
முப்பால் தருவதாக மொழிந்திட்ட புலவர் ஐயா... 
பொருட்ப்பால் ஒன்றுக்கே இனியென் தொண்டை பேசுமென இசைவாணன் எழுந்துவிட்டான்... 
நீண்ட துயில் கலைந்தெழுந்தேன் நெடுநல்வாடை பட்டதாலே...

சார்ந்த செய்திகள்