Skip to main content

செருப்பு துடைத்து ஷூ பாலீஷ் போட்டு-புயல் நிவாரணத்திற்கு உதவிய சாமானியன்!!

Published on 07/12/2018 | Edited on 07/12/2018

 

நெல்லையிலுள்ள பாளையைச் சேர்ந்தவர் பாப்புராஜ். அமெச்சூர் போட்டோகிராபரான இவர், அந்நகரின் பள்ளி, கல்லூரிகளின் மாணவ மாணவியரின் செருப்புகள் துடைத்தும், ஷூ பாலீஸ் போட்டும் சேர்ந்த பணத்தைக் கொண்டு நிவாரணப் பொருட்கள் வாங்கி கஜா புயலால் பாதித்த குடும்பங்களுக்கு உதவியுள்ளார்.

 

நக்கீரன் இணையதள நிருபரிடம் அவர் கூறியதாவது,

ஊடகம், டி.வி.க்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், பிள்ளைகள் படும் கஷ்டத்தையும் துயரத்தையும் கண்டு மனம் பதறினேன். ஆனால் சாதாரண புகைப்படக்காரரான என்னால் அவ்வளவு பணம் செலவழிக்க வழியில்லை. ஒரு யோசனையுடன் நகரின் பள்ளி கல்லூரிகளின் வாசலில் அமர்ந்து, உதவிக்கான போர்டை வைத்துக் கொண்டு மாணவ மாணவிகளின் கால் செருப்புகளைத் துடைத்தேன். அவர்களின் ஷூக்களுக்குப் பாலீஷ் போட்டேன் அனைவரும் தாராளமாக உதவினார்கள். சிலர் செருப்பு துடைக்க வேண்டாமென்று பணம் கொடுத்தார்கள்.

 

வாரத்திற்கு இப்படி இரண்டு நாட்கள் என்று முறை வைத்து ஒவ்வொரு கல்லூரியிலும் மாணவர்களுக்கு சேவை செய்தேன். இதன் மூலம் 31473 ரூபாய் சேர்ந்தது. மேலும், பாளை ரோஸ்மேரி பள்ளியினரும் தாராளமாக உதவினார்கள், அதுதவிர எங்களின் அமைப்பான அன்னை தெரசா பகிர்வு நண்பர் குழுவும் சேர்ந்தே பணியாற்றினோம். இதில் கிடைத்த இரண்டு லட்சத்தில் குடும்பத்திற்கு தேவையான், பால் பவுடர் போர்வை, பெட்ஷீட் சமையல் சாமான்கள் என அனைத்தும் வாங்கிய நாங்கள் கடந்த 4ம் தேதி நாகப்பட்டினம், திருத்துறைபூண்டி மற்றும் காரப்பிடாகை, வேதாரண்யத்தின், சீதக்காட்டுத்துறை ஆகிய கிராமத்தின் 150 குடும்பத்திற்கு வழங்கினோம்.என்றவர் இது எங்களனைவருக்கும் ஆத்மதிருப்தியாக இருந்தது என்றார்.

 

மனிதர்கள் மனம் வைத்தால், எந்த ரூபத்திலும் உதவலாம் என்பதற்கு சான்று இந்த சாமானியனின் செயல்.

சார்ந்த செய்திகள்

Next Story

பறக்கும் முத்தத்தால் பந்தாடிய மனைவி!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
The husband who flew because of the flying kiss

நாகையில், மனைவிக்கு பறக்கும் முத்தம் (flying kiss) கொடுத்த கணவரை மனைவியே அடியாட்களை வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாகை தேவூர் பகுதியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் செந்தமிழ் செல்வன். அவருடைய மனைவி சுதா. அவரும் சித்த மருத்துவராக உள்ளார். செந்தமிழ் செல்வன் - சுதா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது. இருவரும் முறையாக விவாகரத்து பெற்றுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி தன்னுடைய 13 வயது மகனைப் பார்ப்பதற்காக செந்தமிழ் செல்வன் சென்றுள்ளார். ஆனால் அவரது மனைவியான சுதா மகனை சந்திப்பதற்குத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், அடிக்கடி சுதா பணியாற்றும் மருத்துவமனைக்கு வரும் செந்தமிழ் செல்வன், பறக்கும் முத்தம் (flying kiss) கொடுப்பதைப் போல் செய்வதால், தொல்லை தாங்க முடியாத சுதா அடியாட்களை வைத்து செந்தமிழ் செல்வனை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த செந்தமிழ் செல்வன் மருத்துவமனையில் தலையில் கட்டுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story

நிழற்குடையில் வசித்த ஐஸ் வியாபாரி- கோட்டாட்சியர் முயற்சியால் கிடைத்த வீடு; குவியும் பாராட்டுகள்

Published on 26/01/2024 | Edited on 26/01/2024
An ice dealer who lived in Nilukudai - a house obtained through the efforts of Kotatsiyar; Accumulations abound


புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை முருகன் கோயில் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் உள்ள ஒரு நிழற்குடையில் தவளைக்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்த 60 வயது முதியவரான சுப்பிரமணியன் தனது சற்று மனநலம் பாதிக்கப்பட்ட 25 வயது மாற்றுத்திறனாளி பெண்ணுடன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வந்து தங்கியுள்ளார். சுப்பிரமணியன் பகலில் சைக்கிளில் கிராமம் கிராமமாகச் சென்று ஐஸ் வியாபாரம் செய்து அதில் கிடைத்த வருமானத்தில்தான் மாற்றுத்திறனாளி மகளுடன் வசித்து வந்தார்.

பகலில் மாற்றுத்திறனாளி பெண் மட்டுமே அங்கிருந்தார். கரோனா காலத்தில் அந்த ஊர் கிராம நிர்வாக அலுவலராக இருந்த கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநிலச் செயலாளர் அரங்க.வீரபாண்டியன் ஆய்வு மேற்கொண்ட போது நிழற்குடையில் தங்கி இருந்த இவர்களுக்கும் உணவு வழங்கியதோடு அவர்களுக்கு என்று தனி வீடு கட்டிக் கொடுக்க நினைத்தார். இதையறிந்த ஊராட்சி ஒன்றிய இளநிலை உதவியாளர் பரமேஸ்வரி மாற்றுத்திறனாளி பெண்ணின் தேவைகளை பூர்த்தி செய்து வந்தார்.

இந்நிலையில் தான் கந்தர்வக் கோட்டையில் நடந்த சமாபந்திக்கு வந்த புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசனிடம், பேருந்து நிழற்குடையில் வயதான தந்தையுடன் வசிக்கும் மாற்றுத்திறனாளி பெண் பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறார். அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். மனைப்பட்டா கொடுத்தால் உடனே வீடு கட்டிக் கொடுக்கிறேன் என்று கிராம நிர்வாக அலுவலர் வீரபாண்டியன் கோரிக்கை வைக்க உடனே அந்த நிழற்குடைக்குச் சென்று மாற்றுத்திறனாளி பெண்ணை சந்தித்து விபரங்களை கேட்டறிந்த கோட்டாட்சியர், உடனே வீட்டுமனைக்கு இடம் தேர்வு செய்ய வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து கொத்தகம் கிராமத்தில் இடம் தேர்வு செய்து மனைப்பட்டா வழங்கியதுடன் அவர்களுக்கு ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான சைக்கிள் ஆகியவற்றைப் பெற்றுக் கொடுத்ததுடன் உதவித் தொகைக்கும் விண்ணப்பித்துள்ளார். அதே நேரத்தில் மனைப்பட்டா கிடைத்தவுடன் கோட்டாட்சியரிடம் சொன்னது போல வீடு கட்டத் தயாரான கிராம நிர்வாக அலுவலர் வீரபாண்டியன், தனது சொந்த செலவில் ரெடிமேட் கான்கிரீட் சுவர் அமைத்து ஆஸ்பெட்டாஸ் சீட்டில் அழகிய வீடு கட்டி மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, கழிப்பறை வசதிகளையும் செய்தார். கூடுதல் செலவினங்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பெண்ணின் தேவையறிந்து அவருக்கான உதவிகளை இளநிலை உதவியாளர் பரமேஸ்வரி செய்தார்.

இந்தநிலையில் கோட்டாட்சியர் முருகேசனை தொடர்பு கொண்ட கிராம நிரவாக அலுவலர் வீரபாண்டியன், உங்களிடம் கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றி வீடு கட்டி முழுமை அடைந்துள்ளது சார் குடியரசு தினத்தில் நீங்கள் வந்து வீட்டை மாற்றுத்திறனாளி பெண்ணிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அன்புக் கோரிக்கை வைக்க கொத்தகம் சென்ற கோட்டாட்சியர் வீட்டை திறந்து வைத்து குடியேற்றி வைத்து கிராம நிர்வாக அலுவலரையும்  இணைந்து செயல்பட்ட இளநிலை உதவியாளர் பரமேஸ்வரியையும் பாராட்டினார்.

மேலும் சில மாதங்களுக்கு முன்பு முதியவர் சுப்பிரமணியனுக்கு ஒரு விபத்தில் கை உடைந்ததால் ஐஸ் வியாபாரம் செய்ய முடியாமல் தவித்து வருவதால் அவர் பெட்டிக்கடை வைக்க உதவி செய்ய நடவடிக்கை எடுக்கலாம் என்றார். யாரேனும் உதவும் நல் உள்ளங்கள் மாற்றுத்திறனாளி பெண்ணை வைத்துக் கொண்டு உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வருமானமின்றி உள்ள சுப்பிரமணியனுக்கு உதவிகள் செய்ய நினைத்தால் உதவலாம்.

இதனைப் பார்த்த கிராம மக்கள் கோட்டாட்சியர் முருகேசன் மற்றும் தொடர்ந்து உதவிகள் செய்து வரும் கிராம நிர்வாக அலுவலர் வீரபாண்டியன், ஊராட்சி ஒன்றிய இளநிலை உதவியாளர் பரமேஸ்வரி மற்றும் உதவிய உள்ளங்களை பாராட்டி வருகின்றனர்.