ADVERTISEMENT

“ஒருபுறம் தண்ணீரில் தவிக்கிறோம், மறுபுறம் தண்ணீருக்காகவே தவிக்கிறோம்” - ஒரு கிராமத்தின் சோகம்

04:32 PM Feb 08, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

மழைக்காலத்தில் வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள் குடிதண்ணீருக்காக இரண்டு கிலோமீட்டர் தூரம் சென்று தண்ணீரைப் பிடித்து சைக்கிளிலும் தலையிலும் சுமந்து செல்லும் அவலம் இன்றும் தொடர்கிறது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது காடுவெட்டி கிராமம். கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள இந்த கிராமத்தில் நூற்றுக்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. அந்த பகுதியில் கடல்நீர் புகுந்து நிலத்தடி நீர் முழுவதும் உப்பாக மாறிவிட்டது. இதனால் அந்த தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலைக்கு அக்கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் கோடியக்கரை வரை தடையின்றி போகிறது. ஆனால், ஆற்றின் கரையை ஒட்டியே இருக்கும் இந்த மக்களுக்கோ தண்ணீர் கிடைப்பதில்லை.

"கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் நான்கு நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் வருவதால் அடிப்படை உபயோகத்திற்குக் கூட தண்ணீர் கிடைக்காமல் தவிக்கிறோம்" என்று கூறியபடியே அந்த கிராமத்துப் பெண்கள் தலையிலும், சிறுவர்கள் சைக்கிளில் குடங்களைக் கட்டிக்கொண்டும் அடுத்தடுத்த கிராமத்திற்கு தண்ணீரைத் தேடி அலைந்து வருகின்றனர்.

"மழைக்காலத்தில் ஆற்றில் இருகரைகளையும் தொட்டுக்கொண்டு தண்ணீர் போகும். ஆனால், குடிதண்ணீர் எடுப்பதற்கு இதைவிட பெரும் சிரமப்பட்டே எடுத்து வருவோம். வெளியே செல்ல முடியாத மழைக்காலத்தில் எங்கள் நிலைமை மோசமாகிடும் பள்ளிக்கூடத்திற்கும் கல்லூரிக்கும் செல்லும் மாணவர்கள் வீட்டிற்குத் தேவையான தண்ணீர் பிடிப்பதிலே அவர்களின் நேரம் கடந்துவிடும். காலதாமதமாக பள்ளிக்கூடம் போக நேரிடும்" என்கிறார்கள் அந்த கிராமத்துப் பெண்கள்.

“இந்த கிராமம் கொள்ளிடம் ஆற்றின் கரையை ஒட்டியே அமைந்திருந்தும் எந்த பயனும் எங்களுக்கு இல்லை. ஏனென்றால், கடல்நீர் உட்புகுந்து கொள்ளிடம் ஆற்று நீர் முற்றிலும் உப்பாக மாறியதால் ஆற்றுநீரைக் கூட பயன்படுத்த முடியாத அவல நிலையாகிடுச்சி. கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் தினந்தோறும் தண்ணீர் வழங்க வேண்டுமெனவும் அரசுக்கு நாங்கள் பல வருடங்களாகக் கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆடு, மாடுகளுக்குக் கூட தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருகிறோம். தமிழக அரசும் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகமும் தனிக்கவனம் செலுத்தி கிராமத்திற்கு தினந்தோறும் குடிநீர் கிடைக்க வழி செய்ய வேண்டும்" என்கிறார்கள் அந்த கிராம மக்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT